Saturday, October 28, 2017

காஷ்மீர் அமைதி முயற்சிக்கு அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பும் அவசியம்!



ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப, மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. காஷ்மீர் முதல்வராக இருந்த முஃப்தி முகம்மது சய்யீத் 2016 ஜனவரியில் மரணம் அடைந்தது முதல் மாநிலம் அமைதியின்றிக் காணப்படுகிறது. பிரிவினை கோருபவர்களுடன் பேச முடியாது என்று இதுநாள் வரை கூறிவந்த மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இப்போதாவது மாற்றிக்கொண்டிருப்பது நல்ல விஷயம்.

காஷ்மீரில் அமைதி ஏற்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னதாக ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (பிடிபி) வாக்குறுதி அளித்திருந்தது. வாக்குறுதியை நிறைவேற்ற என்னென்ன முயற்சிகளை காஷ்மீர் அரசு எடுக்கும் என்று பார்க்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள நிலையில் அந்தப் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில் நடப்பதை உறுதி செய்வது முதல்வர் மெஹ்பூபா முஃப்திக்குப் பெரும் சவால்.

அத்துடன், சம்பந்தப்பட்ட எல்லா தரப்புடனும் பேச எந்த அளவுக்கு தினேஷ்வர் சர்மாவுக்கு சுதந்திரம் தரப்படவிருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பிரிவினைவாதிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) சமீபத்தில் நடத்தியுள்ள திடீர் சோதனைகள், பேச்சுவார்த்தைகளில் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் பங்கேற்பைக்கூட பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. மக்களிடையே செல்வாக்கு கொண்ட ஹுரியத்தின் கருத்துக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை அரசு உணர்ந்துகொள்வது அவசியம்.

மெஹ்பூபா முஃப்தி 2016 ஏப்ரலில் முதல்வராகப் பதவியேற்றார். மத்திய அரசை எதிர்க்கும் வகையில் பிரிவினை ஆதரவாளர்கள் ஸ்ரீநகர் வீதிகளில் காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார்கள்; பதிலடியாகப் பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை நிரப்பிய துப்பாக்கிகளால் சுட்டனர். அவ்விரு நிகழ்வுகளுக்கு முன்னதாகவே சமரசத் தூதர் வந்து பேச்சைத் தொடங்கியிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகப் போயிருக்காது. புர்ஹான் வானி போன்றோர் கொல்லப்பட்ட போது மக்களிடையே அவர்கள் மீது அனுதாபமும் மத்திய அரசு மீது கோபமும் கொப்பளித்தன. இந்நிலையில், தினேஷ்வர் சர்மா, காஷ்மீர் பள்ளத்தாக்குக்குச் செல்வது மிக மிகத் தாமதமான பயணம் என்றே கூற வேண்டும்.

எல்லைக்கு அப்பாலிருந்து பீரங்கிகளால் சுடப்படுவது அதிகரித்ததால் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்தது. காஷ்மீர் மாநிலப் போலீஸார் மீது எல்லைக்கு அப்பாலிருந்த தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் தொடுத்தனர். இந்த நிகழ்வுகளால் காஷ்மீரில் அமைதி குலைந்தது. 2013-க்குப் பிறகு புதிய தலைமுறை இளைஞர்கள் ஆயுதம் ஏந்த ஆரம்பித்தனர். அவர்களுடைய எண்ணிக்கை குறைந்தபட்சம் 200 ஆக இருக்கும் என்கின்றன பாதுகாப்புப் படை வட்டாரங்கள். இந்நிலையில், மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் தினேஷ்வர் சர்மா எல்லாத் தரப்பினருடனும் பேச அனுமதிக்கப்பட வேண்டும். காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கு அது இன்றியமையாத விஷயமாகும்!

Source:The Hindu Tamil














No comments:

Post a Comment