Saturday, October 28, 2017

காஷ்மீர் அமைதி முயற்சிக்கு அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பும் அவசியம்!



ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப, மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக மத்தியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. காஷ்மீர் முதல்வராக இருந்த முஃப்தி முகம்மது சய்யீத் 2016 ஜனவரியில் மரணம் அடைந்தது முதல் மாநிலம் அமைதியின்றிக் காணப்படுகிறது. பிரிவினை கோருபவர்களுடன் பேச முடியாது என்று இதுநாள் வரை கூறிவந்த மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இப்போதாவது மாற்றிக்கொண்டிருப்பது நல்ல விஷயம்.

காஷ்மீரில் அமைதி ஏற்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்துவோம் என்று தேர்தலுக்கு முன்னதாக ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (பிடிபி) வாக்குறுதி அளித்திருந்தது. வாக்குறுதியை நிறைவேற்ற என்னென்ன முயற்சிகளை காஷ்மீர் அரசு எடுக்கும் என்று பார்க்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள நிலையில் அந்தப் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில் நடப்பதை உறுதி செய்வது முதல்வர் மெஹ்பூபா முஃப்திக்குப் பெரும் சவால்.

அத்துடன், சம்பந்தப்பட்ட எல்லா தரப்புடனும் பேச எந்த அளவுக்கு தினேஷ்வர் சர்மாவுக்கு சுதந்திரம் தரப்படவிருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பிரிவினைவாதிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) சமீபத்தில் நடத்தியுள்ள திடீர் சோதனைகள், பேச்சுவார்த்தைகளில் ஹுரியத் மாநாட்டு அமைப்பின் பங்கேற்பைக்கூட பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. மக்களிடையே செல்வாக்கு கொண்ட ஹுரியத்தின் கருத்துக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதை அரசு உணர்ந்துகொள்வது அவசியம்.

மெஹ்பூபா முஃப்தி 2016 ஏப்ரலில் முதல்வராகப் பதவியேற்றார். மத்திய அரசை எதிர்க்கும் வகையில் பிரிவினை ஆதரவாளர்கள் ஸ்ரீநகர் வீதிகளில் காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார்கள்; பதிலடியாகப் பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை நிரப்பிய துப்பாக்கிகளால் சுட்டனர். அவ்விரு நிகழ்வுகளுக்கு முன்னதாகவே சமரசத் தூதர் வந்து பேச்சைத் தொடங்கியிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகப் போயிருக்காது. புர்ஹான் வானி போன்றோர் கொல்லப்பட்ட போது மக்களிடையே அவர்கள் மீது அனுதாபமும் மத்திய அரசு மீது கோபமும் கொப்பளித்தன. இந்நிலையில், தினேஷ்வர் சர்மா, காஷ்மீர் பள்ளத்தாக்குக்குச் செல்வது மிக மிகத் தாமதமான பயணம் என்றே கூற வேண்டும்.

எல்லைக்கு அப்பாலிருந்து பீரங்கிகளால் சுடப்படுவது அதிகரித்ததால் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைந்தது. காஷ்மீர் மாநிலப் போலீஸார் மீது எல்லைக்கு அப்பாலிருந்த தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் தொடுத்தனர். இந்த நிகழ்வுகளால் காஷ்மீரில் அமைதி குலைந்தது. 2013-க்குப் பிறகு புதிய தலைமுறை இளைஞர்கள் ஆயுதம் ஏந்த ஆரம்பித்தனர். அவர்களுடைய எண்ணிக்கை குறைந்தபட்சம் 200 ஆக இருக்கும் என்கின்றன பாதுகாப்புப் படை வட்டாரங்கள். இந்நிலையில், மத்திய அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் தினேஷ்வர் சர்மா எல்லாத் தரப்பினருடனும் பேச அனுமதிக்கப்பட வேண்டும். காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கு அது இன்றியமையாத விஷயமாகும்!

Source:The Hindu Tamil














Tuesday, October 24, 2017

ரோஹிஞ்சாக்கள் நெருக்கடி: ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வங்கதேசம்


பத்து லட்சம் மக்கள் வரை மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்துள்ளனர் என்பது, அந்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளி உள்ளதாக, ஐ.நாவிற்கான வங்கதேச பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

ரக்கைன் மாநிலத்தில் உள்ள ரோஹஞ்சாக்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதாக குறிப்பிட்ட ஷமீம் அஹ்சன், `தினமும் ஆயிரக்கணக்கானோர் நாட்டினுள் வருகிறார்கள்` என்றார்.

ஆகஸ்டு மாதம், ரக்கைன் போராளிகள், மியான்மர் காவல் சாவடி மீது தாக்குதல் நடத்தியது முதல் இதுவரை ஆறு லட்சம் பேர் வங்கதேசத்திற்கு தப்பி வந்துள்ளனர்.

அஹ்சன், ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பேசினார்.

இதுவரை 340 மில்லியன் டாலர்கள் சேர்ந்துள்ள நிலையில், 434மில்லியன் டாலர்கள் பணம் சேர்ந்தால், பத்து லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு ஆறு மாதங்கள் வரை உதவ முடியும் என்கிறது ஐ.நா அமைப்பு.

குடிநீர், வசிப்பிடம் மற்றும் உணவிற்கு பஞ்சமுள்ளதாக குறிப்பிடும் தொண்டு அமைப்புகள், குழந்தைகள் அதிகம் மடந்துள்ளதாக கூறுகின்றன.

`இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று` என்றார் அஹ்சன், `மக்களை பாதுகாப்பாக, மரியாதையோடு, தானாக முன்வந்து திரும்ப அழைத்துகொள்கிறோம்` என மியான்மர் கூறும் வரை, உதவிகள் என்பது முக்கியம் என்றார் அவர்.

ரோஹிஞ்சாக்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள். அவர்கள் ரக்கைன் மாநிலத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர்.

அவர்களை குடிமக்களாக ஏற்றுக்கொள்ளாத மியான்மர் அரசு, வங்கதேசத்தில் இருந்து வந்த நாடற்றவர்கள் என எடுத்துக்கொள்கிறது.

`ரோஹிஞ்சா இன அங்கிகாரம் அப்பட்டமாக மறுக்கப்படுவதே முட்டுக்கட்டையாக உள்ளது` என்றார் அவர்.

`இதை இன சுத்திகரிப்பிற்கான சிறந்த எடுத்துக்காட்டு` என்கிறது ஐ.நா

ஆகஸ்டு 25ஆம் தேதின்ஞ்சா போராளிகள், மியான்மர் பாதுகாப்புத்துறை சாவடிகளில் தாக்குதல் நடத்தியது முதல் இந்த மக்கள் அங்கிருந்து வெளியேறத் துவங்கினர்.ஊ

இதற்கு முன்பு நடந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டு, வங்க தேசத்தில் குடியேறிய ரோஹிஞ்சாக்கள் மூன்று லட்சம் பேர்.

ஐ.நா அகதிகள் மையத்தின் தலைவரான ஃபிலிப்போ கிராண்டி கூறுகையில், இரு நாடுகளும் மக்கள் நாடுதிரும்புதல் குறித்து பேசத்துவங்கினாலும், ரோஹிஞ்சாக்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லும் நிலையில் மியான்மர் இல்லை என்றார்.

source:BBC TAMIL