Friday, February 3, 2017

மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளட்டும்!- அறிஞர் அண்ணா

பிப்ரவரி 3: அண்ணா நினைவு நாள்

நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால், திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதில் ஒளிவு மறைவு இல்லை. அதைச் சொல்லிக்கொள்வதற்கும் வெட்கப்படுவதற்கும் ஒன்றும் இல்லை. திராவிட நாடு என்று தனியாக இருந்தால், நாம் தொழில் வளர்ச்சி பெற முடியும் என்று சொன்னோம்.

திராவிட நாடு வேண்டுமென்று கேட்டதற்குக் காரணமே, இங்கு தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும்; பிராந்திய சமநிலை ஏற்படுவதற்குப் புதுப்புதுத் தொழில்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. மத்திய சர்க்காரிடம் அதிகாரங்கள் குவியலாக இருக்கக் கூடாது என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை.

மாநில சர்க்கார் பல அதிகாரங்களைப் பல துறைகளிலும் பெற வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. அடுத்து, மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக திராவிட நாடு கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. ஆகவே, திராவிட நாடு நாங்கள் கேட்டதற்கான காரணங்களில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதற்குக் காரணம் என்ன வென்றால், அவை நியாயமான காரணங்கள். மனமார்ந்து ஏற்றுக்கொண்ட காரணங்கள்.

நாங்கள் திராவிட நாட்டை விட்டுவிட்டோம். ‘திராவிட நாட்டைத் தான் விட்டுவிட்டீர்களே, ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள்?’ என்று கேட்டால் ஒப்புக் கொள்ள முடியுமா? இந்த எதிர்ப்பை விட்டுவிட மாட்டோம். ‘திராவிட நாட்டை விட்டுவிட்டதால், எங்களுக்கு சேலம் இரும்பாலை வேண்டாம். ஜாம் ஷெட்பூரிலேயே வையுங்கள்’ என்று சொல்லிவிடுவோமா? நிச்சயமாகச் சொல்ல மாட்டோம். ‘தூத்துக்குடி வேண்டாம்.. இன்னொரு காண்ட்லா கட்டுங்கள்’ என்று சொல்வோமா? நிச்சயமாகச் சொல்ல மாட்டோம்.

திராவிட நாடு கிடைத்தால் என்னென்ன பெறுவோமோ அவை ஒவ்வொன்றையும் இந்திய யூனியனின் உள்ளே இருந்தே பெறலாம், பெற வேண்டும், பெற முடியும் என்ற நம்பிக்கையிலேதான் இருக்கிறோமே தவிர, திராவிட நாட்டுக்கான காரணங்கள் ஒன்றையும் நாங்கள் விட்டுவிடவில்லை.

மாநில சுயாட்சி வேண்டும் என்று நாம் கேட்கிறபோது, இப்படிப் பேசுவது மத்திய அரசைக் குலைப்பதாகும்; நாட்டுக்குப் பெருத்த ஆபத்து வரும் என்று கூறுகின்றனர். மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல. மாநில அரசினர்தான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியவர்கள். மத்திய அரசின் வலிவு அச்சத்தைத் தர, கலக்கத்தைத் தர என்றால், நமது கூட்டு சக்தியின் மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்ரம வலிவைச் சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்.

மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில், மொகலாய சாம்ராஜ்யத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால், இன்று அந்த சாம்ராஜ்யங்கள் எங்கே? நாட்டுப் பாதுகாப்பு தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளட்டும்!

Source:The Hindu

சமநிலை பட்ஜெட்


நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்திருக்கும் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது. முதல் முறையாக திட்டச் செலவு - திட்டமல்லாத செலவு என்ற பாகுபாடு நீக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே துறைக்குத் தனி பட்ஜெட் இல்லாமல் பொது பட்ஜெட்டிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது. மாத இறுதியில்தான் தாக்கல் செய்வது என்ற நடைமுறை மாற்றப்பட்டு பிப்ரவரி முதலிலேயே தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பட்ஜெட்டில், விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, இளைஞர்கள் நலன், வேலைவாய்ப்பு, அடித்தளக்கட்டமைப்பு, சிறு - குறு - நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி, டிஜிடல் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. தொழில்துறையில் ரூ.50 கோடிக்கும் குறைவான விற்றுமுதல் உள்ள தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி விகிதம் 25%ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. தனி நபர் வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. விலக்கு வரம்பு உயர்த்தப்படவில்லை. ரூ.50 கோடி விற்றுமுதல் வரை உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் கார்ப்பரேட் வரி 30%-ல் இருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிமாற்றத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது. டிஜிடல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ‘மினி ஏடிஎம்’ இயந்திரங்களின் மீதான தீர்வை குறைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர்கள் ரூ.2,000-க்கும் மேல் ரொக்கமாக நன்கொடை தர தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வீடமைப்புத் திட்டங்கள் அடித்தளக் கட்டமைப்பு திட்டத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி ஏய்ப்பவர்களின் சொத்துகளைப் பறிமுதல்செய்ய சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்ட பிறகு புதிய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையை ஒட்டுமொத்த ஜிடிபி மதிப்பில் 3.2%-க்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பைப்பெருக்கவோ, உற்பத்தியை ஊக்கப் படுத்தவோ துணிச்சலான திட்டங்கள் இல்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை 3 மாதங்களுக்கும் மேல் சகித்துக்கொண்ட மக்களில் பலர் தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் ஆகிய வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். அவர்களுடைய இழப்புகளை ஈடுகட்ட தனி நடவடிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்த பட்ஜெட் குறித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து நினைவுகூர வேண்டியது. “திட்டம் சார்ந்த செலவுகள், திட்டம் சாராத செலவுகள் என்ற பகுப்பு நீக்கப்பட்டு, மாற்றாக, மூலதனச் செலவுகள் - வருவாய்ச் செலவுகள் என்ற பகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பட்ஜெட் இது. இதன் விளைவுகளைப் பொறுத்திருந்து பார்த்தே இந்த பட்ஜெட்டை மதிப்பிட முடியும்” என்ற சிங்கின் வார்த்தைகள் மிகப் பொருத்தமானவை. அதிக ஆபத்துகள் இல்லாத - துணிச்சலான நடவடிக்கையும் இல்லாத ஒரு பட்ஜெட் இது. விளைவுகளைச் செயல்பாட்டின் வழியேதான் மதிப்பிட முடியும்.

source:Tamil Hindu