Sunday, July 31, 2016

தேவைதான் இந்த அனுமதி!

தாயின் உயிருக்கு ஆபத்து என்கின்ற நிலையில் 24 வாரங்கள் கடந்த நிலையிலும், கருக்கலைப்பு செய்வதில் தவறில்லை என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தற்போது அமலில் உள்ள கருக்கலைப்பு சட்டத்தின் உட்பிரிவுகள் அனுமதிக்கும் விதிவிலக்குக்கு உட்பட்டே அமைந்துள்ளது.

நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, 20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சியடைந்த கருவைக் கலைக்க முடியாது. இருப்பினும், இதே சட்ட விதிகளின் உட்பிரிவின்படி, "தாயின் உயிருக்கு வளரும் கருவினால் ஆபத்து' என்றால், தாய் உயிருக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அக்கரு 20 வாரங்கள் கடந்திருந்தாலும் கருக்கலைப்பு செய்யலாம் என்று அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டதால், உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

இப்படித் தீர்ப்பு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஓர் இளம்பெண், குஜராத் நீதிமன்றத்தில் தனக்கு வல்லுறவால் உருவான 25 வாரக் கருவைக் கலைக்க அனுமதி வேண்டும் என்று வழக்கு தொடுத்து, அவருக்கு "சிறப்பு நேர்வாக" அனுமதி அளிக்கப்பட்டது. தற்போதைய வழக்கில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்னொரு வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவும்கூட வல்லுறவினால் உண்டான கருவைக் கலைக்கக் கோரும் மனுதான். தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இதே தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றமும் வழங்கக்கூடும்.

ஒரு தாயின் உயிரைக் காப்பதற்காக 20 வாரங்களைக் கடந்த நிலையிலும், மருத்துவர் அறிக்கையை ஏற்று, கருக்கலைப்பு செய்வதில் எந்தவிதத் தவறும் இல்லை. ஆனால், கருக்கலைப்பை சட்டப்படி செய்வதானாலும், அதற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பினால், அதற்கான பதில் "இல்லை" என்பதாகவே முடியும்.

12 வாரங்களுக்கு மிகாத கருவை ஒரு தனி மருத்துவர் எடுக்கும் முடிவின்படி, அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் கருக்கலைப்பு செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், 12 வாரங்களுக்கு மேற்பட்ட 20 வாரங்களுக்குட்பட்ட கருவைக் கலைக்க வேண்டுமானால் இரண்டு மருத்துவர்களின் சான்றறிக்கை தேவை.

கரு விபரீதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றோ அல்லது அந்தக் கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து என்றோ அல்லது அந்தக் கருவின் வளர்ச்சி முழுமையற்றதாக இருப்பதால் குழந்தை ஊனமாக அல்லது மூளைவளர்ச்சி குன்றியதாக பிறக்கலாம் என்றோ மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் இவ்வாறாக, 12 வாரங்களுக்கு மேற்பட்ட கருக்கலைப்பு தகுந்த சான்றறிக்கையுடன் நடைபெறுவதே இல்லை.

ஊனமாகப் பிறக்க வாய்ப்புள்ள நிலையில், வல்லுறவில் கரு உருவாகியிருந்தால், கருவைச் சுமக்கும் பெண்ணுக்கு அந்தக் கருவினால் உடல், உயிர், மனநிலைக்குப் பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்பட்டால், கருவுற்ற பெண் மனநிலை குன்றியவராக இருந்தால், ஏற்கெனவே கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருந்தும்கூட கருவுற்றிருத்தல் உள்ளிட்ட சூழல்களில் கருக்கலைப்பை அனுமதிக்கலாம் என்கிறது சட்டம்.

ஆனால், பல நேர்வுகளில் 12 வாரங்களுக்கு உட்பட்ட கரு என்றே பதிவு செய்து கருக்கலைப்பு செய்துவிடும் போக்கு காணப்படுகிறது. இதற்குக் காரணம், 90 விழுக்காடு சம்பவங்களில், மணமாகாத நிலையில் கருவுறுதல், காதலித்ததால் கருவுறுதல், வல்லுறவினால் கருவுறுதல், சிறுமி கருவுறுதல் ஆகியவைதான் கருக்கலைப்புக்கான காரணங்களாக இருக்கின்றன. இன்றைய நவீன வாழ்க்கை முறை, தகவல் தொழில்நுட்பம், மாறும் சமூக வழக்கம் அனைத்தும் இத்தகைய கருவுறுதலை அதிகப்படுத்தியுள்ளது.

பல சம்பவங்களில் வல்லுறவுக்குக் காரணமான அல்லது காதலித்து கருவுறச் செய்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி, திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பதில் ஏற்படும் காலதாமதத்தில் கரு வளர்ந்துவிடுகிறது. சிறுமிகள் இந்த விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவிக்க அச்சப்படுவதாலும் காலதாமதம் ஏற்படுகிறது. பெண்ணின் எதிர்கால வாழ்க்கை, குடும்ப கெளரவம் போன்ற காரணங்களால் பெண்ணின் பெற்றோர் இதனை பதிவு செய்யாமலேயே அல்லது 12 வாரங்களுக்கு உட்பட்ட கருவாக பதிவு செய்து கலைத்துவிடுவதையே விரும்புகிறார்கள்.

தற்போது 24 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க அனுமதி கோரிய வழக்கில்கூட, அந்தப் பெண் காதலித்தபோது கருவுற்று, காதலன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததால் அவர் மீது வல்லுறவு வழக்கு நடைபெற்று வருகிறது. தில்லியில் நிலுவையில் உள்ள இளம்பெண் விவகாரத்தில், அவர் வல்லுறவினால் கருவுற்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யார் மீதும் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு பொதுவான வழிகாட்டுதலை அறிவித்திருக்கலாம். அதாவது, வல்லுறவுக்கு ஆளான, காதலித்தவரால் ஏமாற்றப்பட்ட பெண், 18 வயது நிரம்பாத ஒரு பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தாலே போதுமானது, அவர் 20 வாரங்களை கடந்த கருவை, பாதுகாப்பான மருத்துவ முறைப்படி கலைத்துக்கொள்ளலாம் என்று பொதுவான வழிகாட்டுதலை அறிவித்திருக்கலாம். அப்படி ஏன் செய்யாமல் விட்டார்கள் என்று புரியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பாகத்தான் கருக்கலைப்பு நடைபெறுகிறது என்பதை அரசு உறுதிப்படுத்தியாக வேண்டும். சமூக கேலிக்கு ஆளாகி விடுவமோ என்கிற பயத்தில் பலரும் முறையான மருத்துவ முன்னேற்பாடுகளுடன் கருக்கலைப்பை செய்ய முற்படுவதில்லை. இந்த நிலைமையிலும் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்!


Source:Dinamani

Friday, July 29, 2016

விபத்து அல்ல பாடம்!


வான் பரப்பில் காணாமல்போன இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் ஏ.என்.32 இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை கிடைத்த சிறு சிறு துப்புகளும்கூட தவறானதாகவே முடிந்துள்ளன

என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்திருப்பதைப் பார்க்கும்போது, இந்த விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும், அதில் பயணம் செய்தோர் உயிருடன்

மீட்கப்படும் வாய்ப்புகளும் மிகமிக அரிதாகிக்கொண்டே வருகின்றன.

தாம்பரம் ராணுவ தளத்திலிருந்து அந்தமான் தீவுக்கு (போர்ட் பிளேர்) புறப்பட்டுச் சென்ற ஏ.என்.32 விமானம் 270 கி.மீ. தொலைவுவரை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்துள்ளது. அதன் பிறகு

அந்த விமானம் காணாமல் போய்விட்டது. ஆறு விமானப் பணியாளர்கள் உள்பட 29 பேர் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

கடல்நீரில் விமானம் விழுந்தால் உயிர்பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று பொதுவாக கருதப்பட்டாலும், அது உண்மையல்ல. அதற்கு எதிரான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானம் கடலைத் தொடும்போது எந்தக் கோணத்தில் அமைகிறது என்பதும், மிதவை உடைகள் மற்றும் கடலின் அப்போதைய குளிர்ச்சி அளவு, அந்தப் பகுதியில் சுறாமீன்கள் இருக்கின்றவா என்பதையெல்லாம் பொருத்தே உயிர் பிழைக்கும் வாய்ப்பு அமையும்.

சுறா மீன்கள் இல்லாமல் இருந்து மிதவை உடைகள் இருக்குமேயானால் விமானத்தில் பயணித்தவர்கள் குறைந்தது சில நாள்கள் உயிருடன் மிதக்க வாய்ப்பு உண்டு. அந்த சில நாள்களுக்குள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமானால், விபத்துக்குள்ளான இடம் நிர்ணயிக்கப்படுவதும், அவர்களது உடை, உடைமைகளின் வண்ணங்களும் மிக முக்கியமாகின்றன. பல நிகழ்வுகளில் விமான பயணிகள் இதுபோன்ற விபத்தில் காப்பாற்றப்படுவது இவை மூலம்தான்.

நடுவானில் பழுதடைந்திருந்தால் அனைத்துப் பயணிகளும் மிதவை உடை அணிந்திருக்க வேண்டும். தற்போது இரவிலும் ஊடுருவிப் படம்பிடிக்கும் ரேடார் செயற்கைக்கோள் மூலம் இடத்தை தேடும்

பணிகள் நடைபெற்றாலும் விமானத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. மோரீஷஸ் தீவிலிருந்து சாகர்நிதி கப்பல் அழைக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் அலைகளால் நகர்ந்து இடம்மாறாமல் இருக்கும்

தொழில்நுட்பம் கொண்ட இந்தக் கப்பல் வந்தால், கடலில் விழுந்துள்ள விமானத்தின் சமிக்ஞைகளை துல்லியமாக கணக்கிட முடியும் என்கிறார்கள்.

ஏ.என்.32 விமானம் விபத்துகளை ஏற்படுத்தியதில்லை என்றும் சிறப்பாகச் செயல்படுவது என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதிலும், விமான விபத்துக்கான காரணங்களில் ஒன்றைக்கூட

இதுவரை ஊகிக்க முடியவில்லை. நமது தொழில்நுட்பங்கள் அனைத்துமே ஒரு எல்லைக்கு உட்பட்டவை என்பதையே மீண்டும் மீண்டும் இத்தகைய சம்பவங்கள் உணர்த்திக்கொண்டு இருக்கின்றன.

என்றாலும், இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, இன்னும் நாம் சரியான தொழில்நுட்பங்களைக்கூட கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. விமானம் எந்த இடத்தில் விழுந்திருக்கலாம் என்பதை

ஊகிக்கவும் செயற்கைக் கோள் படங்களைக் கொண்டு அதனைக் கண்டறியவும் நம்மால் முடியவில்லை.

அண்மையில் மலேசிய விமானம் காணாமல் போனபோது, அது கடலில் விழுந்ததற்கான அடையாளங்களை மட்டுமே காண முடிந்தது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நபரின் சடலம்கூட கிடைக்கவில்லை. தற்போது நடந்திருப்பதும் அதேபோன்றதொரு விபத்துதான் என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ராணுவ விமானம் என்பது எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளாகவும், திசை திருப்பிக் கொண்டு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால் பாதுகாப்பு உணர்வுடன் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக ராணுவ விமானங்கள் அமைக்கப்பட வேண்டும். ராணுவ விமானமும் சாதாரண பயணிகள் விமானம் போலத்தான் இருக்கும்

என்றால், அதனால் என்ன பயன்?

நடுவானில் வெடித்துச் சிதறியிருந்தால், செயற்கைக்கோளில் அது பதிவாகியிருக்கும் வாய்ப்புகள் உண்டு. கடந்த நான்கு நாள்களில் அத்தகைய பதிவுகள் ஏதும் தெரியவரவில்லை.

கடலோரக் காவல்படையின் டோர்னியர் விமானம், மூன்று வீரர்களுடன் காணாமல் போனது. அதனை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில தினங்களுக்குப் பிறகு அந்த வீரர்களின் உடல்பாகங்களும்

பயன்படுத்திய சில பொருள்களும் கரை ஒதுங்கின. அதைக் கொண்டே இதை விபத்தாகக் கருதி, முடித்துவைத்தனர்.

இந்திய விமானப்படையில் இதேபோன்றதொரு சம்பவம் 1968-லும் நேர்ந்தது. சண்டீகரிலிருந்து லே விமான தளத்துக்கு 98 பேருடன் பறந்து சென்ற விமானம், மோசமான வானிலை காரணமாக மீண்டும்

சண்டீகருக்கே திரும்பிச் செல்ல பணிக்கப்பட்டது. ஆனால் அந்த விமானம் சண்டீகருக்குச் சென்று சேரவில்லை. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வடஇமாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சடலம், அந்த

விமானத்தில் பயணம் செய்த நபருடையது என்பது தெரிந்தது. அங்கே சோதனை நடத்தி மேலும் பல சடலங்களை மீட்டதோடு, அந்த சம்பவம் ஒரு விபத்து என்றும் முடிவு செய்தனர்.

ஒரு விமானம், விபத்து, தாக்குதல், கடத்தலுக்கு இலக்காகும்போது பயணிகள் அல்லது ஒரு பயணியின் எத்தகைய செயல்கள் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டுசேர்க்கும் என்கிற செயலிகளை நாம்

இன்னும் உருவாக்காமல் இருக்கிறோம். ஒரு விமானம் தரையில் அல்லது கடலில் விழுந்தாலும் ஒளிஉமிழ் பாகங்களை சிதறவிடுவதான உத்திகள், அல்லது காந்தஅலைகளை வெளியிட்டு

இருப்பிடம்காட்டும் உத்திகள் இவை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பதை இந்த விமான விபத்து உலகுக்கு உணர்த்துகிறது.

Source:Dinamani

Monday, July 25, 2016

துருக்கி ஜனநாயகத்தின் பலவீனம்!

டான் - பாகிஸ்தான் நாளிதழில் வெளியான தலையங்கம்

கடந்த வாரத்தில் துருக்கி நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப் பதற்கு அந்த நாட்டின் ராணு வத்தின் ஒரு பகுதியினர் கலகம் செய்தனர். அது அந்த நாட்டின் ஜனநாயகம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. துருக்கி அரசாங்கம், மக்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தினாலோ, இந்தக் கலகத்தைக் காரணமாகக் கொண்டு ஆத்திரத்துடன் செயல்பட்டாலோ இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் விளைவுகள் நீண்டகாலத்துக்கு நீடிக்கும்.

நாட்டில் இதுவரையிலும் 112 அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தற்காலிகப் பணிநீக்கம் அல்லது கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஆயுதம் தாங்கிய படைகளின்மீது பெருமளவில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. ஏறத்தாழ 9,000 காவல் துறையினரும் ஏராளமான நீதிபதிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது உண்மையில் பிரம் மாண்டமான எண்ணிக்கை. ஆட்சிக் கவிழ்ப்பு முயற் சிக்குக் காரணமான ‘நச்சுக் கிருமி’யை அழித்தொழிக்க துருக்கி அதிபர் எர்டோகன் உறுதியாக இருக்கிறார்.

தோற்றுப்போன ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னாலிருந்து இயங்கியவர்கள் எர்டோகனை எந்தவகையிலும் ஒழித்துக்கட்டிவிடுவது என்ற குறிக்கோளோடுதான் செயல்பட்டுள்ளனர் என்று தோன்றுகிறது. ஆனால், எர்டோ கன் அதற்குப் பதில் நடவடிக்கைகளில் இறங்கிவிடக் கூடாது.

துருக்கியில் அரசை எதிர்த்து குர்திஷ் இன மக்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்திவருகின்றனர். இதில் 27 லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். இந்த அகதிகள் பிரச்சினையால் பக்கத்து நாடான சிரியாவோடும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடும் துருக்கிக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனால், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு, உலக நாடுகளின் கண்கள் துருக்கியை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடைமுறையை மறுபடியும் கொண்டுவர துருக்கி முயல் கிறது. அதைச் சில ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அதனால், நாடு தற் போது இருக்கும் சூழலில் ஜனநாயக உணர்வுகளுக்குத் தான் துருக்கி அரசாங்கம் விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்திய ராணுவக் கும்பல் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், மாற்றுக்கருத்து கொண்டுள்ளவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டுவதற்கான வாய்ப்பாக ஜூலை 14-15 தேதிகளில் நடந்த சம்பவங்களை அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்ற நிலை வரக் கூடாது. அதற்குப் பதிலாக, இது போன்ற விவகாரங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்காக சர்வதேச அளவில் நீதித் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளின்படி அவர்கள் முறையான விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும்.

துருக்கியில் நடைபெறும் பழிவாங்கல் நடவடிக்கைகள் பற்றிய தங்கள் கவலையை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் துருக்கிக்குத் தெரிவித்துள் ளனர். பழிவாங்கும் எண்ணத்தோடு நடத்தப்படும் நியாய மற்ற விசாரணைகள் துருக்கியின் ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக காயப்படுத்தவே செய்யும். பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருந்தாலும், மக்கள் தன்னெழுச்சியாகத் துருக்கியின் அதிபருக்கு ராணுவக் கலகத்தை அடக்குவதில் ஆதரவு அளித்தனர். மக்களின் அந்த உணர்வில்தான் எர்டோகன் தனது இதயத்தைச் செலுத்த வேண்டும். துருக்கியின் பிரதமர் பினலி இல்திரிம் சொன்னதைப் போல, இந்த ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தை நாடாளு மன்றத்துக்குத்தான் கொண்டுசெல்ல வேண்டும். அவசர கதியில் செயல்படக் கூடாது.

Source-Tamil Hindu

Saturday, July 23, 2016

விரிவான விவாதம் தேவை!


குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. மக்களவையில் ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், இந்த மசோதா சட்டமாவதில் எந்த இடையூறும் இருக்கப்போவதில்லை.

இந்தச் சட்டத்தில் இரண்டு விஷயங்களில் எதிர்க்கட்சிகளும் குழந்தைகள் நல ஆர்வலர்களும் அதிக அக்கறை காட்டினார்கள். குடும்பத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தினாலும் குற்றமாக கருதப்பட வேண்டும் என்பது முதலாவது கருத்து. அதேபோன்று, 14 வயது வரை சிறார்கள் என்றும், 14 வயது முதல் 18 வயது வரையிலானவர்களை வளர் இளம் பருவத்தினர் (அடோலெசன்ட்) என்றும் இனம்பிரிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினர். அப்படி இருந்தும்கூட எதிர்க்கட்சிகள் அதிக பலம் பொருந்திய மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது.

இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்த மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய, "சிறார்கள் தங்கள் பள்ளி நேரத்துக்குப் பிறகு குடும்பத்துக்குள் பெற்றோருக்கு உதவியாக இருப்பதை இந்தச் சட்டம் தடைசெய்யவில்லை. ஏனென்றால், குடும்பத்துக்குள்ளான தொழில் உதவிகளைப் பொருத்தவரை - முதலாளி -தொழிலாளி என்ற நடைமுறை ஏதும் இல்லை. அதேசமயம், வளர் இளம் பருவத்தினரை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்துதல் குற்றம்' என்று குறிப்பிட்டார்.

குடும்பத்துக்குள் பெற்றோருக்கு உதவுதல் என்பது குறித்தும் வரையறுக்கப்பட வேண்டும் என்பது குழந்தைகள் நல ஆர்வலர்களின் கோரிக்கை. அவர்களது வாதம் இதுதான். அந்தக் குழந்தையின் உதவி அல்லது உழைப்பு, தந்தைக்கான கூலியாக அமைந்தால், அத்தகைய தொழில்முறைகளும் குழந்தைத் தொழிலாளர் முறையாகவே கருதப்பட வேண்டும். பெற்றோர் பீடி சுற்றினால், குழந்தையும் அவர்களுக்கு உதவியாக பீடி சுற்றும்போது, அது தந்தைக்குக் கிடைக்கும் கூலியின் அளவை உயர்த்தவே உதவுகிறது. அதேவேளையில், சொந்த வயலில் நீர்ப்பாய்ச்ச உதவுதல், பூ அல்லது காய்கள் பறித்துக் கொடுத்தல் ஆகிய வேலைகளில் சிறார்கள் ஈடுபடும்போது, அதற்கான கூலி தந்தைக்கு கிடைப்பதாகக் கருத முடியாது. இதுபோன்று, எந்தெந்தக் குடும்பத் தொழில்களில் சிறார்களை ஈடுபடுத்துவது என்பதை மேலும் நுட்பமாக இச்சட்டம் ஆராய வேண்டும் என்பதே அவர்களது வாதம்.

ஆனால், தற்போது நிறைவேறியுள்ள மசோதாவில் அதற்கான திருத்தங்கள் இல்லை. குடும்பத் தொழில் என்றாலும் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்துதல் குற்றம் என்பது மட்டுமே உள்ளது. திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் சிறார்கள் நடிக்கும்போது, பங்குகொள்ளும்போது அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீர்மானிக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. டிவி, சினிமா துறையில் வளர் இளம் பருவத்தினருக்கென தனியான விதிமுறைகளை உருவாக்கவும் இல்லை.

அதேபோன்று, வளர் இளம் பருவத்தினரை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது என்று மட்டுமே சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஆபத்தான தொழில் என்கிற பட்டியல் மாறு

தலுக்கு இலக்காகிறது. மேலும், ஆபத்தில்லா தொழில்கள் என்

றாலும்கூட பின்னாளில் உடல்நலனை பாதிக்கும் தொழில்களிலும், நெறிப்பிறழ்வை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள தொழில்களிலும் வளர் இளம் பருவத்தினரை ஈடுபடுத்துதல் கூடாது என்கின்ற தெளிவான வரையறை இந்தச் சட்டத்தில் தேவை. ஏனென்றால், ஒரு மதுக்கூடத்தில் சிற்றேவலராக இருப்பது ஆபத்தில்லாத தொழில்தான். ஆனால் அது நெறிப்பிறழ்வை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

வளர் இளம் பருவத்தினர் 14 வயதில் 9-ஆம் வகுப்பு படிக்கத் தொடங்கும்போதுதான் உண்மையான கல்வியைப் பெறுகின்றனர். அந்த நிலையில், அவர்களை ஆபத்தில்லா தொழிலில் பணிபுரிய அனுமதித்தால், படிப்பைத் தொடராமல், நடுநிலைப் பள்ளியுடன் நின்றுவிடுவார்கள். இதனால் அறிவான சமுதாயம் உருவாகாது. ஆகவே, வளர் இளம் பருவத்தினர் எனத் தனியாகப் பிரிக்கும்போது அவர்களுக்கான பணிநேரம், பணிசெய்ய அனுமதிக்கப்படும் தொழில்கள், அந்தப் பணிக்கான ஊதியம் ஆகியவற்றையும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது.

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தில் இந்தியா முழுவதிலும் 1.26 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தில் இந்த எண்ணிக்கை 43.5 லட்சமாக குறைந்தது. பத்து ஆண்டுகளில் 50 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் குறைந்திருப்பது தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு சட்டத்தால்தான். "அனைவருக்கும் கல்வி' திட்டமும் ஒரு முக்கியக் காரணம்.

இருப்பினும், இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முற்றிலுமாக இல்லாத சூழலை உருவாக்குவதும், வளர் இளம் பருவத்தினர் உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளியில் கல்வியைத் தொடரும்வகையில், அவர்கள் பணியாற்றக்கூடிய தொழில்களை வரைமுறைப்படுத்துவதும் அவசியம்.

குழந்தைகள் டிவி, சினிமாவில் நடிப்பதை அனுமதிப்பது போலவே, குழந்தைகளை எந்தெந்த விளையாட்டில் ஈடுபடுத்துவது என்பதையும் நெறிப்படுத்த வேண்டும். விளையாட்டு என்ற பெயரில் சாதனை செய்து புகழ் பெறுவதற்காக பெற்றோரே தங்கள் குழந்தைகளை இம்சை செய்யும் சூழல்கள் உள்ளன.

மக்களவையில் இந்த மசோதா மீண்டும் அறிமுகமாகிறபோது, இத்தகைய குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதித்து, அதன் பிறகு நிறைவேற்றுவதே சரியாக இருக்கும்.

Source:Dinamani

Sunday, July 17, 2016

கொந்தளிப்பும் காரணமும்!- KASHMIR ISSUE

கடந்த ஒரு வார காலமாகக் காஷ்மீர் பள்ளத்தாக்கு மிக மோசமான சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சந்தித்து வருகிறது. இதற்குக் காரணம் இஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் இளந்தலைவர் பர்ஹான் முசாபர் வானி, ஜம்மு - காஷ்மீர் மாநில போலீஸ் மற்றும் ராணுவத்தின் கூட்டு நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதுதான்.

2010-ஆம் ஆண்டு முதல் இஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் செயல்பட்ட 22 வயதான வானி, கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும் அனைத்து சமூக வலைத்தள செயலிகள் மூலமாகவும் இளைஞர்களுக்குத் தன்னையும் தனது நோக்கத்தையும் தெரிவித்துக் கொண்டிருந்தவர். "போஸ்டர் பாய்' என்று கொண்டாடும் அளவுக்கு அவர் பிரபலம்.

1989-90 கால கட்டங்களில், இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் தூண்டிவிடப்பட்டு, காஷ்மீர் இளைஞர்களை வெறுப்பும் தனிமையும் கவ்வியது. அதே நிலைமைதான் இப்போது பர்ஹான் வானியால் சமூக வலைதளங்களின் மூலம் உருவாக்கப்பட்டது.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பர்ஹான் வானி, ஏனைய பயங்கரவாதத் தலைவர்களைப் போலல்லாமல், சமூக வலைதளங்களின் மூலம் இளம் காஷ்மீரிகளை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராகத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தவர் என்பதும், முஸ்லிம் இளைஞர்களை மதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்து பயங்கரவாத உணர்வைத் தூண்டிவந்தார் என்பதும் உண்மை. பர்ஹான் வானியின் கனவு இந்தியாவிலிருந்து காஷ்மீரத்துக்கு விடுதலை பெற்றுத் தருவது மட்டுமல்ல. இந்தியாவில் இஸ்லாமியக் கொடி பறக்க வேண்டும் என்பதுதான் அவர் சமூக வலைதளங்களின் மூலம் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருந்த கருத்து. முந்தைய காஷ்மீர் பயங்கரவாத இயக்கத்தினர் "காஷ்மீரியாட்' என்கிற முழக்கத்தை முன்வைத்துப் போராடினார்கள் என்றால், வானியின் அறைகூவல்கள் "இஸ்லாமியாட்' என்பதாகத்தான் இருந்தது. இதுதான் பல இளைஞர்களைக் கவர்ந்ததன் காரணம். ÷

இவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமான பிறகே, அவரைக் கைது செய்வதற்காக சுற்றி வளைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடைசியாக, மாநில போலீஸýம் ராணுவமும் நடத்திய கூட்டுத் தாக்குலில் வானி பலியானார். சுட்டுக் கொல்லப்படும் சம்பவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, வலைதள விடியோ பதிவேற்றத்தில் வானி உரைநிகழ்த்தி, தங்களை ஆதரிக்காத போலீஸார், ஊடகம், சமூக அமைப்புகள் தாக்குதலுக்கு ஆளாவர் என்று பகிரங்கமாக எச்சரித்தார். அடுத்த நடவடிக்கையாக காஷ்மீர் போலீஸார் பலர் கொல்லப்படும் சம்பவங்கள் நடந்ததால், இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு பயங்ரவாத அமைப்பில் இருந்த வானிக்காக இந்த அளவுக்கு வன்முறை வெடிக்கும் என்றால் அதற்குக் காரணம் அவரது ஆளுமை என்பதைவிட, சமூகவலைதளங்களின் கட்டற்ற அனுமதியும் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தியின் மெத்தனமும்தான். சமூக வலைதளங்களில் ஒரு பயங்கரவாத இயக்கம் தனது கருத்தை தெரிவித்து ஒவ்வொரு நாளும் புதிதாகப் பதிவிடும் செயல்பாட்டை முடக்க மத்திய - மாநில அரசுகள் தவறிவிட்டன. வானி இந்த அளவுக்குப் பிரபலமாவதை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும். அப்போதே அவர் கைது செய்யப்பட்டு, அவரது செயல்பாடுகளை முடக்கி இருக்க வேண்டும்.

மாநில அரசு இதில் அக்கறை காட்டவில்லை. மாறாக, 2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் மீது கல்லெறிந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பான 104 வழக்குகளை காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி திரும்பப் பெற்றார். 634 பேரை வழக்கிலிருந்து விடுவித்தார். இப்போது, அப்படி விடுதலையானவர்களின் தலைமையில் காஷ்மீர் இளைஞர்கள் பலரும் மீண்டும் தெருவில் இறங்கி கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கலவரத்தின் மூலம் காஷ்மீர் போராட்டத்தை அங்குள்ள அனைவரும் ஆதரிக்கிறார்கள் என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

அமர்நாத் யாத்திரை சென்றுள்ளவர்களை அச்சத்தில் வைத்திருக்கவும், இனி யாரும் அமர்நாத் யாத்திரையை நினைத்தும் பார்க்கக்கூடாது என்பதற்காகவும் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்திக்கொள்ள காஷ்மீர் பயங்ரவாத அமைப்புகள் விரும்புகின்றன. அமர்நாத் யாத்திரையை இந்தியர்கள் மறக்கும்படி செய்துவிட்டால், அவர்களுக்குக் காஷ்மீர் மீதான பிடிப்பு இல்லாமல் போகும் என்கிற எண்ணமே இதற்குக் காரணம்.

காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களுக்கு மத்திய அரசைக் காட்டிலும் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்திக்கு அதிக பொறுப்பு உள்ளது. முந்தைய ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைமையிலான ஆட்சியும் சரி, இப்போதைய மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஆட்சியும் சரி, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றிக் சற்றும் கவலைப்படாமல், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுவதை ஊக்குவிக்காமல் இருப்பதுதான் பயங்கரவாதம் இந்த அளவுக்கு உயிர்த்தெழுந்திருப்பதற்குக் காரணம்.

பர்ஹான் வானியின் மரணமும் அதைத் தொடர்ந்து காஷ்மீரத்தில் வெடித்திருக்கும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டமும் உண்மை. அதே நேரத்தில், பாதுகாப்புப் படைகள் வானியைச் சுட்டுக்கொன்றது தவறு என்றும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது தவறு என்றும் கூறுவது தவறு. பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாத வன்முறைக் கும்பல், அரசு அலுவலகங்களையும், பொதுச் சொத்துகளையும் சூறையாடுவதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்று சொல்வது அபத்தம்.

Saturday, July 16, 2016

சவாலை எதிர்கொள்ளும் பிரிட்டன்!


ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது என்கிற கருத்து வாக்கெடுப்பு முடிவு வெளிவந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், நான் நீ என்று பிரதமர் பதவிக்குப் போட்டி நிலவாமல், நான் இல்லை, நான் இல்லை என்று பலரும் களத்திலிருந்து விலகிய அசாதாரண சூழல் ஏற்பட்டது என்பதுதான்.

பிரதமர் பதவி என்பது, பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளராக இருக்கும் தெரஸா மேயின் மடியில் வந்து தானாகவே விழுந்தது என்பதுதான் உண்மை. போட்டியில் இருப்பவர்கள் என்று கருதப்பட்ட அனைவரும் போட்டியிலிருந்து விலகி, அவர் தேர்ந்தெடுக்கப்படும் தவிர்க்க முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டனர்.

26 ஆண்டு இடைவெளியில் மார்கரெட் தாட்சருக்குப் பிறகு, தெரஸா பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பதவி ஏற்று இருக்கிறார். கருத்து வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திய போரிஸ் ஜான்ஸன் பிரதமராவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்குவதற்கு முன்பே, தான் போட்டியில் இல்லை என்று அறிவித்து விட்டார். இன்னொரு "பிரெக்ஸிட்' ஆதரவாளரான மைக்கேல் கோவ், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களால் நிராகரிக்கப்பட்டார். விளைவு, தெரஸா மே பிரதமராக வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

நீண்ட நாள் அரசியல் அனுபவமும், நிர்வாகத் திறமையும் கொண்ட தெரஸா மேயின் செயல்பாடுகளும், கொள்கை முடிவுகளும் பலராலும் அவரை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சருடன் ஒப்பிட வைக்கின்றன. அவர் உள்துறை செயலராக இருந்த ஆறு ஆண்டுகள் மிகவும் சிறப்பானவை. அந்த காலகட்டத்தில் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்புகள், எல்லைப் பிரச்னைகள், காவல் துறை சீரமைப்பு போன்றவை பரவலான பாராட்டைப் பெற்றன. வெளிநாட்டினர் பிரிட்டனில் குடியேறுவது குறித்த அவரது கடுமையான நிலைப்பாடு ஒருபுறம் இருந்தாலும், கருத்து வாக்கெடுப்பு நடந்தபோது, பிரதமர் கேமரூனைப் போலவே, தெரஸா மேயும் பிரிட்டன் ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்கிற கருத்தை வற்புறுத்தினார் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை பிரிட்டன் அனுமதிக்கக் கூடாது என்கிற கருத்துடைய தெரஸா மே உள்துறைச் செயலாளராக இருந்தபோது, ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் வெளிநாட்டவரை அனுமதிக்கக் கூடாது என்கிற வரம்பை நிர்ணயிக்க முற்பட்டார் என்றாலும், பிறகு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். அப்போது அவர் பிரிட்டனின் நுழைவு அனுமதி (விசா) கேட்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் 3,000 பவுண்டு வைப்புத் தொகையாகக் கட்ட வேண்டும் என்றும், தங்களது கல்விக் கடனை அடைப்பதற்கு மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகும் தங்கி இருந்து வேலை பார்க்க அனுமதி கிடையாது என்றும்கூட உத்தரவு பிறப்பிக்க இருந்தார் என்பதை மறந்து விட முடியாது.

ஒருபுறம், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்றும், இன்னொரு புறம் பிற நாட்டவர் பிரிட்டனில் குடியேறுவதை முறைப்படுத்த வேண்டும் என்றும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தவர் தெரஸா மே என்பதால்தான் "பிரெக்ஸிட்' ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரு சேர இவருக்கு ஆதரவாக இருந்தனர். தாம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற சூழலில், பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடருமா என்று பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில், "பிரெக்ஸிட் பிரெக்ஸிட்தான்' என்பது. அதேநேரத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டிருந்த தெரஸா மே தொடர்ந்து கூட்டமைப்புடன் ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைப்பும் நல்லுறவும் தொடர முயற்சி மேற்கொள்ள கூடும்.

இனிமேல்தான் பிரிட்டன், எப்படி அதிக பாதிப்பு இல்லாமலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடனான நட்புறவு பலவீனப்படாமலும், அடுத்த கட்டத்திற்கு நகரப் போகிறது என்பது தெரிய வரும். ஐரோப்பிய கூட்டமைப்புடனான பிரிட்டனின் நாற்பதாண்டு உறவைத் துண்டித்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. இது பிரிட்டனின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக் கூடும். அப்படி பாதிக்குமானால், இப்போது வெளிநாட்டினரின் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சாமானிய பிரிட்டிஷ் குடிமக்கள் மேலும் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாவார்கள். அதைப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் தெரஸா மே எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியபோது, பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் எதிர்கொண்டது போன்ற மிகப்பெரிய சவால்கள், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தெரஸா மேயையும் எதிர்கொள்கிறது. "பிரெக்ஸிட்' தீர்ப்பால் பிளவுபட்டுக் கிடக்கும் பிரிட்டனை ஒற்றுமைப்படுத்தும் பணி மிகப்பெரிய சவால். அதைவிடப் பெரிய சவால் பொருளாதார நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும்.

கன்சர்வேடிவ் கட்சி ஒற்றுமையாக இருக்குமா, அவரது தலைமையை ஒருமனதாக ஏற்று நடக்குமா என்பதைப் பொருத்துத்தான், தெரஸா மேயின் எதிர்காலமும், பிரிட்டனின் வருங்காலமும் அமையும்!

SOURCE:DINAMANI