Thursday, November 12, 2015

மியான்மரில் ஜனநாயகக் கீற்றுகள்!

மியான்மர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதாக இருக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளில் இதுதான் உண்மையிலேயே சுதந்திரமாக நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தல். நாடு முழுவதும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்தது என்பதும், ஒரு சிறிய அசம்பாவிதம் அல்லது வன்முறைச் சம்பவம்கூட நடக்கவில்லை என்பதும் பாராட்டுக்குரியது. 3 கோடி வாக்காளர்களில் 80% பேர் திரண்டு வந்து வாக்களித்தார்கள். கிராமப்புறங்களில் இந்த அளவுக்குப் பரவலாக மக்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பதும் இதுவே முதல்முறை. இதற்காக நாட்டின் தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை எடுத்துரைத்த அமைப்புகளும் பாராட்டப்பட வேண்டும். 664 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இடம்பெற 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆங் சான் சூச்சியின் ‘ஜனநாயகத்துக்கான தேசிய லீக்’ (என்.எல்.டி.) கட்சி அமோக வெற்றியுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது. மியான்மரின் வெவ்வேறு நிலைகளிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. மியான்மரின் வரலாற்றில் முதல் முறையாக மக்கள் அரசு அமையப் போகிறது. எனினும், அதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது ராணுவத்தின் கைகளில்தான் இப்போதும் இருக்கிறது. ஆங்சான் சூச்சி அதிபர் பதவி ஏற்க முடியாத சூழலை அந்நாட்டின் அரசியல் சட்டம் மூலம் ஏற்கெனவே உருவாக்கிவிட்டார்கள். பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவரை ஆங் சான் மணந்தார். அவருடைய 2 மகன்களும் இப்போது பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களைக் குடும்ப உறுப்பினர்களாகப் பெற்றவர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது. ஆங் சானை மனதில் கொண்டே அரசியல் சட்டத்தில் இத்திருத்தத்தைச் செய்தது ராணுவ அரசு. ஆனால் நாட்டுக்குள்ளும் சர்வதேச அரங்குகளிலும் அவருக்கு இருக்கும் புகழ், செல்வாக்கு காரணமாக அவருடைய அரசுக்கு ஆதரவும் இருக்கும் என்பது நிச்சயம்.

நாடாளுமன்றத்தின் 664 உறுப்பினர்களில் 25% பேர் ராணுவத்தின் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்க ளுடைய எதிர்ப்புகளைச் சமாளிப்பது ஆங்சான் சூச்சிக்குப் பெரிய சவாலாக இருக்கும். மியான்மரை ஜனநாயக ரீதியாக நிர்வகிப்பது எளிதாக இருக்காது. ஆசியாவின் வறிய நாடுகளில் மியான்மரும் ஒன்று. அரசின் எந்தத் திட்டமும் நாட்டு மக்களில் 3% பேரை மட்டுமே அடைகிறது. ஆயுதம் ஏந்திய வெவ்வேறு இனக் குழுக்கள் அதிகம். மேலும், பவுத்த பெரும்பான்மையினவாதக் குழுக்கள் மதச் சிறுபான்மையோரை அடக்க தொடர்ந்து முற்படுகின்றன. ரோஹிங்கிய முஸ்லிம்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர். கடந்த தேர்தலில் வாக்களித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மியான்மரின் ஜனநாயக இழிவுகளில் ஒன்று. மியான்மர் நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டியிருப்பதால் பெரிய நிறுவனங்களைத் தங்கள் நாட்டுக்கு அழைத்த அரசால் அவை இயற்கை வளங்களை அழித்துச் சுரண்டுவதைத் தடுக்க முடியவில்லை. உலக அளவில் காடுகள் அழிக்கப்படுவதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது மியான்மர்.

புதிதாகப் பதவி ஏற்கவுள்ள அரசு இந்தச் சவால்களைச் சமாளித்தாக வேண்டும். இதுவரை புறக்கணித்துவந்த மியான்மர் மீது இந்திய அரசும் இனி அதிகக் கவனம் செலுத்த வேண்டும்!

Source:Tamil Hindu

813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித் தேர்வு: தமிழ்வழி படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய் யப்படுகிறார்கள். நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களை நிரப்பு வதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஏஓ பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு

தமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந் தும் என்பதால் மொத்த காலி யிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்து குறிப்பிட வேண்டும்.

எழுத்துத் தேர்வு அடிப்படை யில் பணிநியமனம் நடை பெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப் பெண் 300. எழுத்துத் தேர்வுக் கான பாடத்திட்ட விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.

விஏஓ பணியில் சேரு வோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கமான முதலீட்டுத் திட்டங்கள்

வெகு காலமாக யோசனையாகத் தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசாலும் பரிசீலிக்கப்பட்டு, செயல்வடிவில் நிறைவேற்றப்படாமல் இருந்த தங்க முதலீட்டுத் திட்டம் இப்போது அமலுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. தங்கத்தை நாணயமாக விற்பது, வீட்டில் சும்மா வைத்திருக்கும் நகைகளைப் பண மதிப்புக்கு மாற்றிக்கொள்வது, தங்கம் வாங்குவதற்குப் பதில் சேமிப்புப் பத்திரமாகவே வாங்கிக்கொள்வது என்ற 3 திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

அரசுடமை வங்கிகளும் தபால் அலுவலகங்களும் இந்த விற்பனையை இனி மேற்கொள்ளும். ஆண்டுதோறும் சுமார் 1,000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக அரிய அந்நியச் செலாவணியை ஆண்டுதோறும் இழப்பதைத் தடுக்கவும் கையிருப்பில் உள்ள தங்க நகைகளை மறு சுழற்சி மூலம் தேவைப்படுவோருக்கு விற்கவும் இது நல்லதொரு ஏற்பாடு.

மகாத்மா காந்தி, அசோகச் சக்கரம் உருவங்கள் பதித்த தங்க நாணயங்கள் 5 கிராம், 10 கிராம் எடையில் விற்கப்படவுள்ளன. விரைவில் 20 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளும் விற்கப்படும். தேவைப்படும்போது இதை உருக்கி நகைகளாகச் செய்துகொள்ளலாம் அல்லது எடை மதிப்புக்குப் புதிய தங்கம் வாங்கிக்கொள்ளலாம். அவசரத் தேவைக்கு அன்றைய சந்தை விலைக்கேற்ப விற்றுப் பணம் பெற்றுக்கொள்ளலாம்.

வீட்டில் வாங்கி வைத்திருக்கும் நகைகளைக் கனிம, உலோக வர்த்தகக் கழகம் (எம்.எம்.டி.சி.) நாடு முழுவதும் திறக்கவுள்ள 125 விற்பனை நிலையங்களில் கொடுத்து உருக்கி, தங்க மதிப்புக்கேற்ப சான்றிதழை வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்துக்கு அதை முதலீடு செய்து ஆண்டுதோறும் 2.5% வட்டி பெறலாம். தேவைப்படும்போது இதைத் தங்கமாகவோ, அன்றைய விலை நிலவரப்படி பணமாகவோ மாற்றிக்கொள்ளலாம்.

புதிதாகத் தங்கம் வாங்குவதற்குப் பதில், நாம் வாங்க நினைக்கும் தங்க எடைக்கு நிகரான தங்கப் பத்திரத்தை வாங்கலாம். இதற்கு ஆண்டுக்கு 2.75% வட்டி கிடைக்கும். இந்த தங்கப் பத்திரத்தை யாராவது களவாடினால்கூட அவர்களால் அதைப் பணமாக்கிக் கொள்ள முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அதே எடைக்குத் தங்கமாகவோ பணமாகவோ மாற்றிக்கொள்ளலாம். வாங்கிய சில காலத்துக்குப் பிறகு இதை வங்கியில் அடமானம் வைத்துக் கடனும் வாங்கிக்கொள்ளலாம், விற்கவும் செய்யலாம்.

வீடுகள், கோயில்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றில் இருக்கும் தங்கத்தின் அளவு தோராயமாக 20,000 டன்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்குத் தங்கம் அரசுக்குக் கிடைத்தால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்ளலாம். இறக்குமதிக்குத் தேவைப்படும் அந்நியச் செலாவணியை வேறு பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம். வெளிவர்த்தகப் பற்று வரவும் கணிசமாகக் குறையும்.

அனைத்து அரசியல் கட்சிகள், சமூகக் குழுக்கள், தங்க வியாபாரிகள், பொற்கொல்லர்கள் என்று இதில் தொடர்புள்ள அனைத்துப் பிரிவினரின் கருத்துகளையும் கேட்பது இத்திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து முன்னேற்றம் காண உதவும். கருப்புப் பணத்தைத் தங்கமாக மாற்றி மேலும் லாபம் சம்பாதிக்க நினைப்போருக்கு இடம் தரக் கூடாது. இந்தத் திட்டம் வெற்றி பெற வட்டி வீதத்தை மேலும் உயர்த்த வேண்டும். வருமான வரி விதிப்பை 5 அல்லது 10 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட வேண்டும். மக்கள் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.

Source:Tamil Hindu