Tuesday, September 2, 2014

எங்கெங்கும் "எத்தனால்' பயன்பாடு!

இந்தியாவில் முதல் முறையாக எத்தனால் எனும் எரி பொருள் மூலம் இயங்கும் பேருந்து ஓட்டத்தை மராட்டிய மாநிலம் நாகபுரி நகரத்தில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்துள்ளார்.

எத்தனால் என்கிற எரியெண்ணெய் விவசாய விளைபொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. பெட்ரோலுக்கு நிகரான எரிதிறன் கொண்டது. எத்தனால் என்பது உயிர் காற்றான ஆக்ஸிஜனை உள்ளடக்கிய நிறமற்ற ஒரு எரிதிரவம் ஆகும்.

பிரேசில் நாட்டில் எத்தனால் எனும் இந்த இயற்கை எரி பொருள் மூலம் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து எந்திரங்களும் இயக்கப்படுகின்றன. பிரேசில் நாட்டில் கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் கூட, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் எத்தனால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.

பிரேசில் நாட்டில் 1980-ஆம் வருடத்திற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களின் என்ஜின்களும் பெட்ரோல், எத்தனால் என இரண்டு வகையான எரிபொருள்களின் மூலமும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் எத்தனாலை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

தற்போது இந்தியாவில் எரிவாயு, பெட்ரோல் இரண்டையும் பயன்படுத்தக்கூடிய வகையில் வாகனங்களில் பெட்ரோல் என்ஜின்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், வாகன என்ஜின்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் தற்போது உள்ள நிலையிலேயே ஐம்பது சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோல், டீசலை பயன்படுத்தி நம் நாட்டில் வாகனங்களை இயக்கலாம்.

கடந்த 2002-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, எரிபொருள்களுடன் ஐந்து சதவீதம் வரை எத்தனாலை கலந்து பயன்படுத்தலாம் என உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசாங்கத்தின் அரசிதழில் அரசாணையாகவும் அது வெளியிடப்பட்டது.

மேலும், எத்தனாலை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மூலப்பொருள்களான விவசாய விளைபொருள்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தவும், கரும்பு மற்றும் மக்காச்சோள சாகுபடி நிலப்பரப்பை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளிடமிருந்து எத்தனாலை கொள்முதல் செய்யவும், எத்தனாலுக்கு உற்பத்தி வரி விதிக்கலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கவும், எத்தனால் உற்பத்தி செய்வதற்கு தகுதியான எந்திரங்களை எங்கிருந்து வாங்கலாம், எப்படி வாங்கலாம், எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் ஆகியவை குறித்தெல்லாம் ஆய்வு செய்யவும், மத்திய மாநில அரசுகளோ அல்லது எண்ணெய் நிறுவனங்களோ, எத்தனாலை மக்களுக்கு விநியோகிக்க உரிய வழிமுறைகளை செய்யவும், மேலும் எத்தனால் பயன்பாடு குறித்த பல்வேறு முடிவுகளை எடுக்கவும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

முதல் கட்டமாக, 2003-ஆம் வருடத்திற்குள் 9 மாநிலங்களில் இதனை செயல்படுத்தவும், தொடர்ந்து எத்தனால் பயன்பாட்டை பாரத நாடு முழுவதும் அதிகரிக்கவும் தனித்தனியாக கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

2017-ஆம் ஆண்டிற்குள் 20 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருளை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும் என அன்றைய உணவுத்துறை அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஏழு அமைச்சர்கள் மற்றும் திட்டக்கமிஷனை உள்ளடக்கிய கமிட்டியும் அமைப்பட்டது. கமிட்டிகள் இயங்காத நிலையிலேயே இருந்தன.

2007-ஆம் வருடம் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, இந்தியாவிற்கு வருகை தந்த பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனெசியோ லுலாட சில்வா முன்னிலையில் நடைபெற்ற மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எத்தனால் பயன்பாட்டின் மூலம் இந்தியாவில் பசுமையான சூழலை உருவாக்குவோம் என உறுதி மொழி கொடுத்தார்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சி முடிவடையும்வரை எத்தனால் பயன்பாடு இந்தியாவில் எங்கும் நடை முறை படுத்தப்படவில்லை.

12 வருடங்களுக்கு முன்பாக (2002-இல்) மத்திய அரசு எத்தனால் எரிபொருள் குறித்து பிறப்பித்த உத்தரவை யார் தடுத்தார்கள் என்பது புரியவில்லை. இதனால், இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு யார் பொறுப்பு என்றும் தெரியவில்லை.

தற்போது மோடி அரசு பதவியேற்று நூறு நாள்களுக்குள்ளாக மராட்டிய மாநிலம் நாகபுரி நகரத்தில் எத்தனால் எரிபொருள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

நமது நாட்டில் 70 சதவீத பெட்ரோலிய பொருள்களின் தேவை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலமே தீர்க்கப்படுகிறது. நமது நாட்டின் எண்ணெய் கிணறுகள் மூலம் வெறும் 30 விழுக்காடு அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

எரிபொருள் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கின்றன.

ஆண்டுதோறும் பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசு செலவழித்து வருகிறது. இதன் மூலம் நமது நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு பெரும் நஷ்டம் அடைகிறது.

பெட்ரோலிய பொருள்களில் எத்தனால் கலந்து உபயோகிப்பதன் மூலம் வருடத்திற்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நம் நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. நமது நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விலைவாசியும் விஷம் போல் உயர்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவதன் மூலமும் மத்திய அரசுக்கு பெருந்தொகை செலவாகிறது.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, எத்தனால் பயன்பாட்டை 70 சதவீதம் பெட்ரோலியப் பொருள்களோடு கலந்து பயன்படுத்துவதே ஆகும். மீதி 30 விழுக்காடு எரிபொருள் தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் தன்னிறைவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் எண்ணெய் இறக்குமதியைத் தவிர்க்கலாம். அனைவரும் அறிந்த இந்த உண்மையை நடைமுறைப்படுத்த கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

மேலும், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் இயங்கும் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் வெளியிடும் கார்பன் காரணமாக பெருமளவில் புகை மாசு உருவாகி சுற்றுச்சூழல் பெரிதும் கெடுகிறது.

ஆனால், கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக் கிழங்கு போன்ற விவசாய விளைபொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் எரிபொருள் மூலம் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் இயக்கப்படும் போது உயிர்காற்றான ஆக்ஸிஜன் பெருமளவில் வெளிப்படுகிறது. புகை, மாசு எதுவும் கிடையாது.

தாவரங்கள் நாம் சுவாசித்து வெளியேற்றுகின்ற கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி ஆக்சிஜனை வெளியேற்றி மனித குலத்திற்கு நன்மை பயப்பது போல, எத்தனாலில் இயங்கும் எந்திரங்கள் ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகின்றன.

இந்தியாவில் விளைவிக்கப்படும் கரும்பு முழுமையாக சர்க்கரை உற்பத்திக்கு மட்டுமே பயன்படுகிறது. பின்னர் சர்க்கரை ஆலைக் கழிவுகளிலிருந்து மொலாசஸ், ஆல்கஹால் (எரிசாராயம்), மதுபான வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இருந்த போதும் சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்கிறார்கள்.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு சர்க்கரையும் மலிவாக கிடைப்பது இல்லை. அவ்வப்பொழுது சர்க்கரை தட்டுப்பாடும் ஏற்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து சர்க்கரையும் இறக்குமதி செய்யும் தேவையும் ஏற்படுகிறது.

கரும்புச் சக்கையிலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்; சர்க்கரை ஆலைகளும் லாபத்தில் இயங்கும்; சர்க்கரை விலையும் குறையும்.

மேலும் எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம், புதிய தொழில் வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் பெருகிடும். விவசாயம் லாபகரமானத் தொழிலாக மாறும்.

இந்தியாவில் கரும்பு மற்றும் மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம், விவசாயிகள் வளமான வாழ்வைப் பெறுவார்கள்.

எத்தனால் பயன்பாட்டின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாகக் குறைந்திடும். விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்படும்.

எனவே, எத்தனால் எரிபொருள் பயன்பாட்டுத் திட்டம் நாடு முழுக்க விரிவடைய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநில அரசுகளும், பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பு நல்கி நம் நாட்டை வளமான தேசமாக மாற்றிட வேண்டும்.

Source:Dinamani