Monday, October 25, 2010

பிரதமர் ஜப்பான் பயணத்தால் தென்மாநிலங்களுக்கு லாபம்: சீனாவால் சாதகம்

பிரதமர் ஜப்பான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் பெரிய அளவு உறவு நெருக்கம் இல்லாத நிலையில் பிரதமர் மன்மோகன், "கிழக்காசியாவின் பக்கம் கவனம்' என்ற கருத்தில் ஜப்பான், வியட்னாம், மலேசியாவிற்கு மேற்கொண்ட பயணம், பொருளாதார அடிப்படையில் பயன் தரும். சிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகன், ஜப்பான் பிரதமர் நயாடோகனுடன் நடத்திய பேச்சுக்கள் பெரிதாக பலன் தரும் என்ற எதிர்பார்ப்பில்லை.ஆனால், சீனாவின் பொருளாதார அணுகுமுறையில் திருப்தியில்லாத ஜப்பான், இந்தியாவின் பக்கம் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால், இதுவரை, "அபூர்வ கனிம வளங்களுக்கு' சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் ஜப்பான், இந்தியா பக்கம் தன் கவனத்தை திருப்ப முன்வந்திருக்கிறது.

இம்மாதிரி கனிமங்கள் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகம் என்று சர்வதேச மதிப்பீடு அறிக்கை தெரிவிக்கிறது.அருணாச்சல் மாநிலத்தில் அர்த்தமற்ற முறையில் உரிமை கொண்டாடும் சீனா, நமக்கு தொந்தரவு தருவதற்கு அந்த விஷயத்தை முக்கியத்துவப்படுத்துகிறது. அதே போல, ஜப்பான் தீவுகளில் சிலவற்றிலும் அர்த்தமற்ற உரிமை கொண்டாட விரும்பும் சீனாவை, ஜப்பான் விரும்பவில்லை.ஆகவே, இந்தியாவில் உள்ள "அபூர்வ கனிம வளங்களை' வாங்கிக் கொண்டால், அதற்கேற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தினால், அது நீண்ட காலத்திற்கு தனது புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவிடும் என்று ஜப்பான் கருதுகிறது. அந்த அடிப்படையில் தொழில் துறை பயன்பாட்டிற்காக, "பெங்களூரு - சென்னை' இடையே அதிவிரைவு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி உதவ நிதி தரவும் தயாராக இருக்கிறது.

ஆகவே, பிரதமர் மேற்கொண்டிருக்கும் ஜப்பான் பயணம் உடனடியாக பலன் தரும் வகையில் பரபரப்பு இருக்காது என்றாலும், நீண்ட கால அடிப்படை உறவில், தொழில் வளர்ச்சியில், பொருளாதார வளர்ச்சியில் வளம் காட்ட வழிவகுக்கும் என்ற கருத்து உருவாகியிருக்கிறது. அதுவும் தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் புதிய தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

மரங்களை வளர்ப்போம்

நம்நாட்டில் மொத்த நிலப்பரப்பு 32.87 லட்சம் சதுர கிலோ மீட்டர். இதில் 7.75 லட்சம் சதுர கிலோ மீட்டரில் வனப் பகுதிகள் உள்ளன. இது மொத்த நிலப்பரப்பில் 23.75 சதவீதமாகும். நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33.33 சதவீதப் பரப்பளவை வனப் பரப்பாக ஏற்படுத்த வேண்டும் என்பது தேசிய வனக் கொள்கையாகும்.

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1.30 லட்சம் சதுர கிலோ மீட்டர். அதில் 22,877 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு வன நிலமாகும். இது தமிழகத்தின் நிலப்பரப்பில் 17.59 சதவீதமாகும்.

இன்னும் 11.4 கோடி மரங்கள் வளர்க்கப்பட்டால்தான் வனப்பரப்பளவு 33 சதவீதத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. உலக வெப்பமயமாதலைத் தவிர்க்க மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்ற பிரசாரமும் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் மரம் வளர்ப்பதற்காக "சமூகக் காடு வளர்ப்புத் திட்டம்' போன்ற திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

அரசு, அமைச்சர்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் அவ்வப்போது மரக் கன்றுகள் நடும் விழாக்கள் நடைபெறுகின்றன.

ஆனால், இவையெல்லாம் மரம் வளர்ப்பதில் பெரிய வெற்றியைக் கொடுத்தனவா? என்று கேட்டால், இல்லை என்பதே நிதர்சனம்.

மரம் வளர்ப்பதில் பொதுமக்களின் நேரிடையான பங்கு இல்லாததே இதற்குக் காரணம்.

நகரப் பகுதிகளில் மரம் வளர்க்க இடம் இல்லை. கிராமப்பகுதியில் மட்டுமே மரம் வளர்க்க முடியும். சாதாரண விவசாயிகள் பெரும்பாலும் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை மட்டும் பயிர் செய்கின்றனர். அப்படிப் பயிர் செய்யும் வயல் வரப்பில் தங்களுடைய வீட்டுத் தேவைக்காக ஒரு சில தென்னை, மா மரங்களை வளர்க்கின்றனர்.

அதிக அளவில் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டும் ஏக்கர் கணக்கில் தென்னை, மா போன்ற மரங்களை வளர்க்கின்றனர். சாதாரண மக்களை மரம் வளர்க்கும் திட்டத்தில் இணைப்பது எப்படி என்று அரசு, சமூக சிந்தனையாளர்கள், உளவியலாளர்கள் இதுவரை சிந்திக்காதது ஏன் என்பதும் கேள்விக்குரியது.

ஒவ்வொரு கிராமத்திலும் அரசுக்குச் சொந்தமான இடங்கள் நிறைய உள்ளன. அந்த இடங்களில் கிராம மக்களைக் கொண்டே மரங்கள் வளர்க்கலாம்.

அரசுக்குச் சொந்தமான இடத்தை ஒரு கிராமத்துக்கு என்று பொதுவாக ஒதுக்கி, அதில் ஒவ்வொரு குடும்பமும் தலா 10 அல்லது 20 மரங்களை வளர்த்துக் கொள்ளலாம் என உத்தரவிடலாம்.

20 ஆண்டுகள் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் விளைபொருள்களை மரத்தை வளர்ப்பவர்கள் அனுபவிக்கலாம். ஆனால், வளர்ந்த மரங்களை வெட்டக் கூடாது என்று அறிவிக்கலாம்.

உதாரணத்துக்கு, தென்னை மரம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விளைச்சல் கொடுக்கும் என்று வைத்துக் கொண்டால், அடுத்த 15 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் மகசூல் விவசாயிக்கே சொந்தமாகும்.

நிலமற்ற ஏழை விவசாயிகள், குறு, சிறு விவசாயிகள் 15 ஆண்டுகளுக்கு 20 தென்னை மரங்களிலிருந்து வருமானம் கிடைக்கும் என்றால் ஏன் மரம் வளர்க்க வர மாட்டார்கள்?

நேரிடையான பலன் கிடைக்கும் என்றால் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.

இதைப் போலவே கல்லூரி மாணவ, மாணவிகளை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தலாம். ஒவ்வொரு கல்லூரிக்கும் சில ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அங்கு மரங்களை மட்டும் வளர்க்க வேண்டும். அதுவும் மாணவ, மாணவிகள் நேரிடையாகச் சென்று வளர்க்க வேண்டும்.

உதாரணத்துக்கு, ஒரு கல்லூரியில் 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் அந்தக் கல்லூரிக்கு 500 மரங்கள் வளர்க்க இடம் ஒதுக்க வேண்டும். வாரம் முழுவதும் சுழற்சி அடிப்படையில் மாணவர்கள் நேரிடையாகச் சென்று மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்க வேண்டும். மரங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.

பள்ளி, கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் முதல் நாளே ஒரு மரக்கன்றை நட்டு வைக்க வலியுறுத்தலாம். அந்த மரத்துக்கு அந்த மாணவரின் பெயரையே சூட்டலாம். இதன் மூலம், அந்தக் மரக்கன்றைப் பராமரிப்பதில் மாணவர்களிடையே ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிக் காலங்கள் முடியும் வரை அந்த மரத்தைப் பராமரிக்க அறிவுறுத்தலாம்.

இப்படிச் செய்வதால் மரம் வளர்ப்பதோடு, இளைய தலைமுறையினரிடம் மரம் வளர்ப்பது குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியும்.

தொழிற்சாலைகள் பெருகி வரும் சூழ்நிலையில், ஒவ்வொரு தொழிற்சாலையும் ஒரு குறிப்பிட்ட ஏக்கரில் மரம் வளர்க்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரலாம்.

எல்லாம் கேட்பதற்கு நல்லா இருக்கு... ஆனால் நடைமுறையில் நிறைய பிரச்னைகள் வருமே என்ற கேள்வி எழலாம்.

மரம் வளர்க்கிறேன் என்று இடத்தை வாங்கிக் கொண்டு சிறிது காலம் கடமைக்குச் சில மரங்களை வளர்த்துவிட்டு பிறகு, அந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தினால் என்ன செய்வது?

மரம் நன்றாக வளர்ந்து 20 ஆண்டுகள் பலன் தந்த பின்னர் அந்த மரங்களில் இருந்து வரும் விளைச்சல் யாருக்குச் சொந்தம்?

இப்படி நடைமுறைச் சிக்கல்கள், கேள்விகள் நிறைய எழலாம்.

முறையாகச் சிந்தித்து, தெளிவாக முடிவெடுத்தால் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

சீனப் பூனைக்கு யார் மணி கட்டுவது?

ஆசியப் பிராந்தியத்தில் சீனா வல்லமை மிக்க நாடாக பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் வளர்ந்துவிட்டது. அதைச் சுற்றியிருக்கும் நாடுகளான "இந்தியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் பொருளாதாரத்திலும், ராணுவ ரீதியிலும் வளர்வது அதன் கண்களை உறுத்துகிறது.

ராணுவ ரீதியாக மோதி தன் வலிமையைக் காட்ட விரும்பாத சீனா, ராஜதந்திர ரீதியாகக் காய் நகர்த்துகிறது. ஆசியப் பிராந்தியத்தின் நிகரற்ற சக்தியென்று தன்னை நிரூபிக்க அரும்பாடுபடுகிறது. இதற்கு அதனுடைய சக்தியை விரயம் செய்யாமல் எடுபிடிகள் போலுள்ள நாடுகளான பாகிஸ்தானையும், வடகொரியாவையும் லாகவமாகப் பயன்படுத்துகிறது.

உலகச் சந்தையில் அமெரிக்க தயாரிப்புகள் அதிகம் கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றின் விலையோ மிக அதிகம். அடுத்தபடியாக ஜப்பான், தென் கொரியா, இந்தியா இவை மூன்றும் அசுர வேகத்தில் சீனப் பொருளாதாரத்துடன் போட்டி போடுகின்றன. சீனாவோ இவற்றின் வேகத்தை முடக்க நினைக்கிறது.

ஒரு மனிதனுக்கு பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை இம்மூன்றில் எது வந்தாலும் அவன் வளர்ச்சியானது முடிந்துவிடும். இது நாட்டுக்கும் பொருந்தும், வீட்டுக்கும் பொருந்தும், ஹிட்லருக்குப் பிடித்தது மண்ணாசை. அவர் உயிர் விடுவதற்கும் அதுதான் காரணம். ஜப்பான் தன் நெஞ்சில் இரண்டு அணுகுண்டுகளைச் சுமந்த வலி இன்னும் மறையவில்லை. இது வரலாறு சொல்லும் உண்மை.

இந்த பாணியை சீனா இப்பொழுது கையில் எடுத்துள்ளது. ஆனால் வேறு பாதையில்.

ஜப்பான், சீனா எல்லையை ஒட்டியுள்ள மூன்று தீவுகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறது. தைவான் தனக்குக் கீழ்ப்படியாமலிருப்பதால் அதனை விழுங்கக் காத்திருக்கிறது. தென் கொரியாவை வளைக்கத் தன் கைப்பிள்ளை வடகொரியாவை ஏவி ரகளை செய்கிறது.

இந்தியா மீது ஒரு கண் வைக்க பாகிஸ்தானைத் தயார்படுத்தி வைக்கிறது. இப்படி ஆசியப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையைத் திரை மறைவிலிருந்து சீனா அரங்கேற்றி வருகிறது.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் செய்த நேர்முகப் போரை விரும்பாமல் ராஜதந்திர ரீதியில் தன் கைப்பிள்ளைகளை ஏவி வேலை செய்கிறது சீனா. பர்மா மக்களின் துயரம் மிக மிக அதிகம். ஜனநாயகம் மலர மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், பர்மா ராணுவம் விரும்பவில்லை. பர்மாவை ஒட்டியுள்ள நாடு இந்தியா. இதற்குள் எளிதாக ஊடுருவ முடியும் என்ற வழி ஒன்றுக்காகவே பர்மா மீது காதல் சீனாவுக்கு.

1962-ல் இந்திய - சீனப்போரில் இந்தியா இழந்திட்ட பகுதி இப்பொழுதுள்ள கேரள மாநில அளவுதான். இதை சீனா இந்தியாவுக்கு விட்டுத் தருமா? உலகமே எதிர்த்தபோது திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. அதை சுதந்திர நாடாக அறிவிக்குமா?

அருணாசல பிரதேசத்தை சீனா தனக்குச் சொந்தங் கொண்டாடுகிறது. ஜப்பானுடன் மூன்று தீவுகளுக்கு இப்போது தள்ளு முள்ளு. இப்படி தனக்கொரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா? ஜப்பான் சீனாவில் செய்துள்ள முதலீடுகள் மிக அதிகம். அதை இழக்க விரும்பவில்லை சீனா. இதற்காகச் சமாதானப்படுத்த சில ஜப்பான் மீனவர்களை விடுதலை செய்துள்ளது சீனா. நேரடி மோதல் முடியாவிட்டால் தன் கைப்பிள்ளை வடகொரியா மூலம் ஹிம்சைதர ஆரம்பிப்பது அதன் வழக்கம்.

இப்படி ஆசிய பிராந்தியத்தில் தன் நிலம் என்று உரிமை கொண்டாடும் சீனா இந்திய நிலப்பரப்பை விட்டு விலகுமா? பர்மாவுக்கு இந்தியா தந்த "கோகோ' தீவில் சீன ராணுவத்துக்கு என்ன வேலை?

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு, காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளில் சீனாவுக்கு என்ன அக்கறை? எனினும் சோவியத் ரஷியாவானது 13 நாடுகளாகச் சிதறிய பிறகு உலக அரங்கில் கம்யூனிசத்துக்குத் தலைமை ஏற்றுள்ள சீனா இன்னொரு பனிப்போருக்கு ஆயத்தமாகிவிட்டது.

ஜனநாயகம் அமைதியாக இருக்கத் தெற்கு ஆசியாவில் தன்னைக் காத்துக் கொள்ள இந்தியாவும் தயார் நிலையிலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும். உலக அரங்கில் மற்ற நாடுகளைப் புரிந்துகொள்ளும் இந்தியா சீனாவைப் புரிந்து கொள்ளாதது மிக வியப்பாகவே உள்ளது.

சீனாவின் வலையில் இந்தியா சிக்குவது சாத்தியமில்லை என்று உணர்த்த வேண்டிய தருணமிது. ஜப்பானைப் போன்று சீனாவின் பொருளாதாரம் நம் சந்தையிலுள்ளது. சீனாவின் சகல விதமான வளர்ச்சிக்கு அதன் பொருளாதாரம் மிக முக்கியமான காரணமாகும். ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா இவற்றின் சந்தையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் சீனா தன் கொள்கையிலிருந்து மாறுபட்டு முரண்டு பிடிக்கிறது.

சீனப் பொருள்களின் இறக்குமதிக்கும் அவர்களின் வர்த்தகத்துக்கும் இந்தியா முட்டுக்கட்டை போடுவதன் மூலம் சீனாவுக்குப் பாடம் புகட்டலாம்.

நேரடியாக நம்மால் முட்டுக்கட்டை போட முடியாது. உலக வர்த்தக அமைப்பு யார் வேண்டுமானாலும் எந்தப் பொருளையும் எங்கேயும் விற்கலாம் என்று சொல்கிறது. இதனால் நேரடியாகத் தடை செய்தால் நமக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் தரம் இல்லாத பொருள்களை இறக்குமதி செய்வதில்லை.

மேற்கத்திய நாடுகளும் அப்படியே. அதையும் மீறி இறக்குமதி செய்தால் அதன் மீது அதிகமான வரி விதிக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் உற்பத்திப் பொருள்களைக் காட்டிலும் இறக்குமதிப் பொருள்கள் விலை அதிகம்.

ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. சீனா பொருள்கள் தரம் குறைந்ததாக மலிவு விலையில் நம் சந்தையை நிரப்புகின்றனர். இதனால் அவர்களுக்கு நல்ல லாபம். 120 கோடி மக்கள்தொகை சீனாவுக்கு நல்ல லாபத்தைத் தருகிறது. இதற்குப் பலியாவது நல்ல தரத்தில் உற்பத்தி செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்கள். இப்படி நாமும் சீனாப் பொருள்களை மறைமுகமாக வரி மற்றும் தரம் ரீதியாகக் கட்டுப்படுத்தினால் இந்தியாவில் இன்னொரு தொழில்புரட்சி சாத்தியமோ, பொருளாதார ரீதியில் பலம் கொண்டதால் ஆட்டம்போடும் சீனா இனி யாரையும் மிரட்ட முடியாது.

எல்லை தாண்டி வரும் ஆபத்து!

வங்கதேச நலனுக்காகப் போரிட்டு, பாகிஸ்தானிடமிருந்து அந்த நாட்டைப் பிரித்து,பாகிஸ்தானுடன் மேலும் பகையைச் சம்பாதித்து, வங்கதேசம் என்றொரு தேசத்தை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்த இந்திரா காந்தி கனவிலும் நினைத்திருக்க மாட்டார், வங்கதேசத்தால் எதிர்காலத்தில் இப்படியொரு பிரச்னை ஏற்படப் போகிறது என்று.

எப் பிரச்னையால் அன்று பாகிஸ்தானிடம் இந்திரா காந்தி போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டாரோ, அதே பிரச்னைதான் இன்றும். ஆனால் இன்று இருக்கும் தலைவர்களால் எல்லையைத் தாண்டி நாட்டுக்குள் ஊடுருவும் வங்க அகதிகளையும், தீவிரவாதிகளையும் கட்டுப்படுத்தக்கூட முடியாத இயலாமை.

நாட்டுக்குள் 2 கோடி வங்கதேசிகள் ஊடுருவிய பின்னர்தான் இவர்களுக்கு எல்லைக் கோட்டில் வேலி அமைக்க வேண்டும் என்ற எண்ணமும், அவர்களைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்கிறது என்றால் இவர்களது கடமை உணர்ச்சியையும், தேசபக்தியையும் எப்படிப் "பாராட்டுவது' என்றே தெரியவில்லை.

அசாம், மேகலயா, திரிபுரா, மிஜோரம் ஆகிய 4 மாநிலங்களில் 4,096 கிலோ மீட்டர் தூரம் உள்ள வங்கதேசத்தின் எல்லை, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது என்றால் அது மிகையல்ல.

தற்போது எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எல்லையின் வழியாக 1972-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்தியாவுக்குள் வந்த 12 லட்சம் வங்கதேசிகள், மீண்டும் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவில்லை என எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கின்றனர்.

அந் நாட்டின் நிலைத்த தன்மையற்ற ஆட்சியால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அகதிகளாக அந்த நாட்டு மக்கள், நமது நாட்டுக்குள் ஊடுருவி வந்தனர். ஆனால் இன்று நிலைமையே வேறு. கஞ்சா, அபின் என போதை வகையறாக்களும், தடை செய்யப்பட்ட சீன நாட்டுப் பொருள்கள், நவீன ரக ஆயுதங்கள், இந்திய கள்ள நோட்டுகள் என அனைத்துப் பொருள்களும் நாடு முழுவதும் தங்குதடையின்றி கடத்தப்பட்டு, கறுப்புச் சந்தையில் விற்கப்படுகின்றன.

இதற்கெல்லாம் மேலாக உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் தீவிரவாதமும், தீவிரவாதிகளும் உலகத்தின் பல பகுதிகளில் பயிற்சிபெற்று, இந்தியாவுக்குள் வங்கதேச எல்லை வழியாகவே இறக்குமதி செய்யப்படுகின்றனர். அண்மைக்காலமாக தீவிரவாதத்தின் வாசலாகவே வங்கதேசத்தின் எல்லைப் பகுதி உள்ளது.

எந்த நாட்டில் குண்டு வெடிப்புகள், வன்முறைச் சம்பவங்கள் நடந்தாலும் ஏதாவது ஒரு வகையில் அதில் வங்கதேசிகள் சம்பந்தப்படுகிறார்கள் என உள்துறை அமைச்சகம் தனது பங்குக்கு எச்சரிக்கிறது.

ஆனால், நம்ம ஊர் அரசியல்வாதிகளோ, வங்கதேசிகளுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் என ஓர் இந்தியனுக்கு வழங்க வேண்டிய சகல உரிமைகளையும் வழங்கி, அங்கேயும் வாக்கு அரசியல் நடத்துகிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் வந்தேறிகளாகக் குடியேறிய வங்கதேசிகள் இப்போது சில பகுதிகளில், அப் பகுதி அரசியலை நிர்ணயிக்கக் கூடிய சக்திகளாக வலுப்பெற்றுள்ளதற்கு வாக்குகளுக்கு விலைபோகும் அரசியல்வாதிகளும், பணத்துக்கு விலைபோகும் அரசு அதிகாரிகளும்தான் முழுக் காரணம்.

வங்கதேசிகளின் ஊடுருவலை நிறுத்துங்கள், அந் நாட்டில் இருந்து மேற்கு வங்கம், அசாம், மிஜோரம், மேகலயா, திரிபுரா மாநிலங்களில் குடியேறி இருக்கும் வங்கதேசிகளைக் கண்டறிந்து, அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது அனைவருக்கும் நினைவு இருக்கலாம்.

உச்ச நீதிமன்றமே இவ் விஷயத்தில் தலையிட்டு, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியும், நமது அரசோ வங்கதேசிகளைக் கண்டறிவது கடினம் என இரு கைகளையும் முடிந்த அளவுக்கு விரித்துக் காட்டுகிறது. நமது கண்காணிப்பு முறை பலவீனமாக இருப்பதன் காரணமாகத்தான், எல்லை தாண்டும் வங்கதேசிகளைக் கண்டறிவதிலும், தடுப்பதிலும் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுவதாக ப.சிதம்பரம் தான் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதும் கூறினார்.

வங்கதேசிகளை அவர்கள் நாட்டுக்குள் அனுப்புவதற்கு குழுக்களை நியமித்து இருப்பதாகக் கூறுகிறது மத்திய அரசு. ஆனால், எத்தனை வங்கதேசிகள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற முழுமையான விவரத்தை இதுவரை வெளியிட்டதாகத் தெரியவில்லை.

இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு இணையாக, வங்கதேசிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசிகளின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. இப்போது அது 2 கோடியாக அதிகரித்துள்ளது என வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசிகளின் ஊடுருவல் குறித்து ஆய்வு செய்த ஒரு தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாட்டை அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் இப்படி வரம்பில்லாமல் வங்கதேசிகள் வந்து குடியேறுவதுபற்றி மத்திய அரசு சிறிதும் லட்சியம் செய்யாமல் இருப்பதை அரசியல் சட்டக் கடமையிலிருந்து மத்திய அரசு தவறியதாகத்தான் கருத நேரும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்தும், இவ் விஷயத்தில் அரசு இன்னும் மெத்தனம் காட்டுகிறது.

உதாரணமாக, எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியை 2007-ம் ஆண்டுக்குள் முடிப்பதாகக் கூறிய மத்திய அரசு, இன்னும் அந்தப் பணியை முடித்தபாடில்லை.

இனியும் மத்திய அரசு தனது நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவில்லையென்றால், ஊடுருவிய வங்கதேசிகள் இந்தியாவில் உரிமையும் கோருவார்கள்.

Wednesday, October 6, 2010

உலகளவில் அழிந்து போனதாக கருதப்பட்ட கடல் உயிரினங்கள் இனங்கள் கண்டுபிடிப்பு

உலகளவில் முதல் முறையாக கடலில் உள்ள உயிரினங்கள் குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 5 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கருதிய சில உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகளவில் கடலில் எவ்வளவு உயிரினங்கள் உள்ளன என்பது குறித்து இரண்டாயிரத்து 925 கோடி ரூபாய் செலவில் முதல் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டது. கடுங்குளிர் நிலவும் துருவ பிரதேசங்கள் தொடங்கி, வெப்பம் அதிகமுள்ள நிலநடுக்கோடு பகுதி வரை பல்வேறு தட்ப வெப்பநிலையில், அலைகள் வரும் கடற்கரை முதல் கடும் இருள் சூழ்ந்த ஆழ்கடல் பகுதி வரையுள்ள பல்வேறு பகுதிகளில், கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர் முதல் உலகில் பெரியதான நீலத்திமிங்கலம் வரை எல்லா உயிரினங்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 10 லட்சத்திற்கும் அதிகமான உயிரின வகைகள் கடலில் இருக்கலாம் என்று தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 7 லட்சத்து 50 ஆயிரம் உயிரினங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பின் போது புதியதாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புதிய மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் அடித்தளமாக 21ம் நூற்றாண்டு திகழ்வதுடன், புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு; கடல் வாழ் உயிரினங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்; கடல்வழி பாதைகள் ஆகியவை இந்த கணக்கெடுப்பின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பில் 670 நிறுவனங்கள், 2 ஆயிரத்து 700 விஞ்ஞானிகள், 9 ஆயிரம் நாட்களில் 540க்கும் மேற்பட்ட முறை கடலில் பயணம் செய்து 3 கோடி முறை உற்றுநோக்கி ஒரு லட்சத்து 20 ஆயிரம் இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பில் பணியாற்றிய விஞ்ஞானி ஜெஸ்சி அயூசுபெல் கூறுகையில், "உலகில் முதல் முறையாக தற்போது கடல் உயிரினங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு, கடந்த 250 ஆண்டு காலத்தில் மக்களுக்கு தேவையானவற்றை அளிக்கும் அகராதி மற்றும் கலைக்களஞ்சியம் போன்று தகவல்களை கொடுக்கும். கடலில் செய்யப்பட்டுள்ள ஆய்வு மூலம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் கடலை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும், எதிர் காலத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிய வந்துள்ளது,' என்றார்.

கணக்கெடுப்பு குழுவை சேர்ந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஐயன் பயனீர் கூறுகையில், "இதுவரை நமக்கு தெரிந்த உயிரினங்கள் தவிர, இதுவரை கண்டுபிடிக்கப்படாத உயிரினங்கள் அதிகளவில் முதல் முறையாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலில் வாழும் உயிரினங்களுக்கு ஒழுங்கான சீதோஷ்ண நிலை, ஆக்சிஜன், அதிகளவு உணவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளன,' என்றார். கணக்கெடுப்பில், 16 ஆயிரத்து 764 இன மீன் வகைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. 5 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கருதிய சில உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இன்னும் புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை மற்ற விஞ்ஞானிகளுக்கு அளித்துள்ளது.

நம் கௌரவப் பிரச்னை...

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என்பது ஒரு கௌரவப் பிரச்னை மட்டுமல்ல, உலகத் தரத்திலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்த விளையாட்டுப் போட்டிகள் வாய்ப்பளிக்கின்றன. அதுமட்டுமல்ல, எந்தவொரு விளையாட்டுப் போட்டி ஒரு நாட்டில் நடைபெறும்போதும், அந்த விளையாட்டுப் போட்டியில் தங்கள் நாட்டு வீரர்கள் உலக சாதனையாளர்களுடன் பங்கு பெறுவதன் மூலம் தேர்ச்சி அடையவும், முடிந்தால் உலக சாதனைகளைப் படைக்கவும்கூட இந்த விளையாட்டுப் போட்டிகள் உதவும் என்பதும் ஒரு காரணம்.

ஏனைய நாடுகள் இதுபோன்ற சர்வதேச உலகப் போட்டிகளை நடத்த முன்வரும்போது, முதல் கட்டமாகத் தங்களது நாட்டில் அந்த விளையாட்டுகளில் வெற்றி வாய்ப்புடைய இளைஞர்களைத் தேடிப் பிடித்துப் பயிற்சி அளிக்கிறார்கள். ஓரளவுக்கு, உலக அரங்கில் போட்டியிடுமளவு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தயாரான பிறகுதான் இதுபோன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தப் பல வளர்ச்சியடையும் நாடுகள் முன்வருகின்றன.

கடந்த முறை சீனாவில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்தபோது, அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு விளையாட்டுக்கும் பத்து முதல் பதினைந்து வயதுவரை உள்ள இளைய தலைமுறையினரை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பல தங்கப் பதக்கங்களை வென்று சீனா உலகையே பிரமிப்பில் ஆழ்த்த முடிந்தது.

இதெல்லாம் நமக்குத் தெரியாததல்ல. நம்மிடம் மனிதவளத்துக்கும் பஞ்சமில்லை. திறமைக்கும் பஞ்சமில்லை. ஆனால், திறமைசாலிகளை முறையாக அடையாளம் கண்டு, கிராம அளவிலிருந்து தொடங்கி போட்டிகள், பயிற்சிகள் என்று முனைப்புடன் செயல்பட இந்தியாவில் நிர்வாக இயந்திரம் தயாராக இல்லாததுதான் நமது குறை.

இந்திய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாதியின் தன்னிலை விளக்கம் முற்றிலும் நிராகரிக்கப்படக்கூடியதல்ல. விளையாட்டு கிராமத்திலுள்ள மொத்தம் 36 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 18 குடியிருப்புகளைத்தான் கட்டி முடித்து ஒப்படைத்திருக்கிறார்கள். இப்போதுதான் அவசரக் கோலத்தில் மீதமுள்ள 18 குடியிருப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. குடியிருப்புகளில் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதுதான் ஒலிம்பிக் கமிட்டியின் வேலையாக இருக்க முடியுமே தவிர, குறித்த நேரத்தில் கட்டி முடிப்பது அவர்கள் வேலை இல்லையே. இதற்கான பழியை தில்லி அரசும், மத்திய நகர்ப்புற அமைச்சகமும்தானே ஏற்றுக்கொள்ள வேண்டும்!

சர்வதேச அளவிலான போட்டிகள் நடக்கும்போது, அதன் செயல்பாடுகளை பிரதமர் அலுவலகமும், மத்திய விளையாட்டு அமைச்சகமும் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்க வேண்டும். காமன்வெல்த் போட்டிகள் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும் தன்மீது எந்தப் பொறுப்பும் சுமத்தப்படக்கூடாது என்பதில் எல்லா பிரிவினரும் உஷாராக இருப்பதன் விளைவுதான், இதுபோன்ற குளறுபடிகளுக்குக் காரணம். தவறுக்குப் பொறுப்பேற்காமல் தட்டிக் கழிக்கும் இந்திய சுபாவத்தின் அடையாளத்துக்குக் காமன்வெல்த் போட்டிகள் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டன.

விளையாட்டு வீரர்கள் வரத் தொடங்கிவிட்டனர். இங்கிலாந்திலிருந்து வீரர்கள் வருவதற்கு முன்பே அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்காக 20 உதவியாளர்கள் வந்துவிட்டனர். கென்யாவிலிருந்து 112 பேர், நைஜீரியாவிலிருந்து 69 பேர், ஸ்காட்லாந்திலிருந்து 60 பேர் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தில்லி வந்து சேர்ந்துவிட்டனர்.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் கூற்று பொறுப்பின்மையின் உச்சகட்டம் என்றாலும்கூட, கல்யாண முகூர்த்தம் நெருங்க நெருங்க, நாம் குறைகளைக் குத்தித் தோண்டி நாமே நம்மீது சேற்றை வாரி இறைத்துக் கொள்வதைவிட, மணப்பந்தலில் கவனம் செலுத்துவதுதானே நியாயம்? கடைசி நிமிடத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று விட்டேற்றித்தனமாக இருக்கக்கூடாதுதான். ஆனால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நெருங்கிவிட்ட நிலையில், இனி நாம் சுறுசுறுப்பாக இயங்கி, முடிந்தவரை இந்தியாவின் கௌரவம் சர்வதேச அளவில் பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடைசி நிமிடத்திலும் நம்மவர்கள் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். இங்கிலாந்து மகாராணி தனது வயோதிகம் காரணமாகப் போட்டிக்கு வர இயலாததால் இளவரசர் சார்லûஸ அனுப்பி வைத்திருக்கிறார். மகாராணி வராததால் போட்டிகளை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று நமது அதிகார வர்க்கம் குரலெழுப்பி வீண் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த காலனிகள் சுதந்திரம் அடைந்த பிறகும், பிரிட்டனுடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக ஏற்பட்டதுதான் "காமன்வெல்த்' என்கிற அமைப்பு. இந்த அமைப்பில் தலைமை வகிப்பது பிரிட்டிஷ் ராஜகுடும்பம். நாம் "காமன்வெல்த்' அமைப்பில் இருந்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் எதுவும் இல்லை. ஆனால், அந்த அமைப்பில் அங்கம் வகித்து, அதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் முற்பட்ட பிறகு, பிரிட்டிஷ் இளவரசர் போட்டிகளைத் தொடங்கி வைக்கக் கூடாது என்று முரண்டு பிடிப்பது அநாகரிகம்.

இதுவரை செய்துவிட்ட குளறுபடிகள் போதுமே. இனிமேலாவது, இதுபோன்ற தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி, கீழ்த்தரமான அரசியலை காமன்வெல்த் போட்டிகளில் அரங்கேற்றாமல், இந்தியாவின் கௌரவத்தையும், காமன்வெல்த் போட்டிகளின் வெற்றியையும் கருத்தில்கொண்டு செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்.

ஊடகங்களும் சரி, சற்று அடக்கி வாசித்தால் நல்லது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் ஒருசில நாள்களே உள்ள நிலையில், நடந்துவிட்டிருக்கும் தவறுகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதைவிட, தவறுகளை எப்படி எல்லாம் திருத்துவது என்பதிலும், கூடியவரை உலக அரங்கில் இந்தியாவின் கௌரவம் காப்பாற்றப்படுவதிலும் கவனம் செலுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

"ஆதார்' எனும் ஆதாரம்!

இந்தியாவின் முதல் தேசிய அடையாள அட்டை (ஆதார்) மகாராஷ்டிர மாநிலத்தில் ஓர் ஆதிவாசி குடியிருப்பில், ரஜ்னா சோனாவாணே என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முதல் தேசிய அடையாள அட்டையை யாரோ ஒரு பெருநகரவாசிக்கு அளிக்காமல், கடைக்கோடியில் உள்ள ஆதிவாசி குடியிருப்பில் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியதுதான்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, முதல் ஆதார அட்டை ஆகஸ்ட் 2010 முதல் பிப்ரவரி 2011-க்குள் வழங்கப்பட்டுவிடும் என்று இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம் அறிவித்த திட்டத்தின்படியே இது நடந்துள்ளது என்பதும்கூட, இவர்கள் சொன்னபடி 2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி மக்களுக்கும் ஆதார அட்டைகளை வழங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தருகிறது.

நகரவாசிகளைவிடவும் மிகவும் முக்கியமாக கிராம மக்களுக்குத்தான் இத்தகைய அடையாள அட்டை தேவையாக இருக்கிறது. ஆதார அட்டையைப் பெற்றுக்கொண்ட முதல் பெண் தனது நன்றி தெரிவிப்பில்கூட, "ஆதாரம் இனி என் வாழ்வின் ஆதாரம்' என்று கூறியிருப்பது மிகமிக உண்மை.

தற்போதைய சூழ்நிலையில் குடும்ப அட்டையை வங்கிகள்கூட ஓர் அடையாளமாக ஏற்கத் தயங்கும் அளவுக்குப் போலி குடும்ப அட்டைகள் மலிந்துவிட்ட நிலையில், எல்லா பயன்பாட்டுக்கும் பொருந்துகின்ற ஆதாரம் போன்ற அடையாள அட்டைகள் மிகமிக அவசியமாகின்றன. பன்னிரண்டு இலக்கங்கள் கொண்ட ஆதார அட்டை எண்ணைப் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணைப்பை வழங்க முடியும். ஒருவேளை, ஆதார அட்டை எண்ணும் செல்போன் எண்ணும் ஒன்றாக இருக்கும் நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த ஆதார அட்டை உண்மையிலேயே ஏழைகளுக்குத்தான் அடிப்படையான விஷயங்களில் தேவையாக இருக்கிறது. முதலாவதாக உணவு, இரண்டாவதாக மருத்துவம், மூன்றாவதாகக் கல்வி. இந்த அட்டையை வழங்கிப் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஆதாரம் இல்லாத காரணத்தால் ஏழைகளால் வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை, குடும்ப அட்டை பெற முடியவில்லை. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியவில்லை. இந்த ஆதார அட்டை அத்தகைய நிலையைப் போக்கும் என்று கூறியுள்ளார். அது உண்மைதான். இருப்பினும், இந்த ஆதார அட்டை வெறும் ஆதாரமாக இல்லாமல், எல்லா பயன்பாட்டுக்கும் தொடர்புடைய ஆவணமாக மாற்றப்பட்டாக வேண்டும்.

இந்த ஆதார அட்டைகளை அடிப்படையாக வைத்து பொருள் விநியோகத்தைத் தொடங்கும்போது, ஏழையின் பெயரைச் சொல்லி உணவு தானியங்களை வேறு இடங்களுக்குக் கடத்தவும், பொது விநியோக மையங்களில் கொடுக்காமல் தவிர்க்கப்படுவதுமான நிலையைத் தவிர்த்துவிட முடியும். மேலும், இந்த ஆதார அட்டையில் இருப்பவர் எத்தகைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், எந்தெந்தத் தடுப்பூசிகள் அரசால் போடப்பட்டன, இவர் எந்தெந்தத் திட்டத்தில் பயனடைந்தார் என்கிற அனைத்துத் தகவல்களும் - இந்த ஆதார எண்ணைத் தட்டினாலே கணினியில் பார்க்க வகைசெய்ய முடியும். ஆதார அட்டையால் பயன்பெறப் போகிறவர்கள் முழுக்க முழுக்க ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த அட்டை ஒவ்வொரு இந்தியனின் பிறந்த தேதி, தாய் தந்தை, ஊர், மாவட்டம், மாநிலம், ரத்த வகை ஆகியவற்றோடு, ரேகைப்பதிவு அடையாளங்களையும் கொண்டிருக்கும் என்பதால் இதன் பயன்பாடு பலவகைப்பட்டதாக இருக்கிறது.

பெருவிரல் ரேகைப் பதிவு இருப்பதால் இதில் போலிகள் வராது என்றாலும்கூட, நம் அரசு ஊழியர்கள் செய்யும் குளறுபடிகளால் இத்திட்டம் அர்த்தமற்றதாக மாற்றப்படும் அபாயங்கள் உள்ளன. கைரேகைப் பதிவு சரியாக இருந்தாலும் பெயர் மாறுதல், தவறாக அச்சிடுதல், பிறந்த தேதியைத் தவறாகக் குறிப்பிடுதல் என்று எல்லா குளறுபடிகளையும் செய்யும் துணிவும் ஆற்றலும் கொண்டவர்கள் நம் அரசு இயந்திரத்தின் உறுப்புகளாக இருக்கிறார்கள். தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை இதற்கு ஒரு சான்று.

வாக்காளர் அடையாள அட்டைகளுக்காகப் புகைப்படம் எடுத்து, நேரடி சரிபார்ப்பு முடித்தும் பலருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவே இல்லை. தேர்தல் நேரத்தில் வழங்கப்படாமல், எங்கோ ஒளித்து வைக்கப்பட்டு, பிறகு குப்பையில் கொட்டப்பட்ட வாக்காளர் அட்டைகள் பற்றி நிறையச் செய்திகள் வந்தும், எந்தவொரு அதிகாரி, ஊழியர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

வாக்காளர் பதிவேட்டில் உள்ளவருக்கு எப்படி அடையாள அட்டை மட்டும் இல்லாமல் போகும்? அதற்குப் பொறுப்பானவர் யார்? என்கிற விசாரணைகூட இல்லையென்றால், இதற்குக் காரணம் அலுவலர்களின் சோம்பேறித்தனமா அல்லது அரசியல்வாதிகளின் சதியா? எது உண்மை?

வாக்காளர் அடையாள அட்டை வழங்கவில்லை அல்லது தவறான புகைப்படம், பிழையான பெயரில் வழங்கப்பட்டது என்று சொன்னால், வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்புக்கொள்வதில்லை.

தொலைந்துபோனதால் வேறு அடையாள அட்டை வழங்கக் கோரும் மனுவைக் கொடுத்து, வாக்காளரைக் குற்றவாளியாக்கும் நடைமுறைதான் தற்போது அமலில் இருக்கிறது.

இதே நிலைமை ஆதார அட்டைக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தவறுக்குக் காரணமான ஊழியர், அதைச் சரிபார்க்கத் தவறிய அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம். அதைச் செய்ய அரசு தயங்குமானால், வாக்காளர் அடையாள அட்டை குழப்பம் போலவே, ஆதார அட்டை அர்த்தமிழக்கும்.

நல்லதொரு தொடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, குளறுபடிகளோ, குறைபாடுகளோ இல்லாத, எல்லா விவரங்களையும் உள்ளடக்கிய, எல்லா பயன்பாட்டுக்கும் உதவக்கூடிய அடையாள அட்டை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், ஊடுருவல்கள் தவிர்க்கப்படுவது மட்டுமல்ல, சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.