Wednesday, September 29, 2010

தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு

நாட்டு மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முன்னோடி திட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் தேம்ப்ளி எனும் பழங்குடியின கிராமத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார்.

2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வெளிநாட்டவர் ஊடுருவலைத் தடுக்க அடையாள அட்டை அவசியம் உணரப்பட்டது. அத்துடன் அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யவும் இத்தகைய அடையாள அட்டை அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்தே அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவதற்காக இன்ஃபோசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி தலைமையில் அடையாள அட்டை வழங்குவதற்கு தனி ஆணையம் அமைக்கப்பட்டதோடு, இத்திட்டத்தைச் செயல்படுத்த பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக மும்பையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள தேம்ப்ளி எனும் பழங்குடியின கிராமத்தில் 10 பேருக்கு அடையாள அட்டைகளை பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை வழங்கினார்.

"ஆதார்' (ஆதாரம்) எனப்படும் இத்திட்டம் மிகவும் முன்னோடியானது என்றும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டினார்.

பயோ-மெட்ரிக் அடிப்படையில் அதாவது அடையாள அட்டை வைத்திருப்பவரின் புகைப்படத்தோடு கைவிரல் ரேகையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே இத்தகைய முறையில் அடையாள அட்டை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே அடையாள அட்டையாக இது விளங்கும். இதை வழங்கி பிரதமர் மன்மோகன் பேசியது:

தொழில்நுட்பத்தின் பலன் இந்த அளவுக்கு உலகின் வேறெங்கும் பயன்படுத்தப்பட்டதில்லை. நாட்டிலுள்ள அனைவருக்கும் வெகு விரைவில் இத்தகைய அடையாள அட்டை வழங்கப்படும். நவீன இந்தியாவின் புதிய தோற்றத்தை வெளி உலகுக்குப் பறை சாற்றுவதாக இந்தத் திட்டம் அமையும். தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் முன்னேற்றத்தை இது உணர்த்தும்.

சாதாரண மக்களுக்கு அரசின் நலத் திட்டப் பயன் சென்று சேர்வதற்கு இந்த அடையாள அட்டைகள் உதவியாக இருக்கும். இத்தகைய அடையாள அட்டை இல்லாததால்தான் ஏழை, எளிய மக்களால் வங்கிக் கணக்கு தொடங்க முடிவதில்லை, ரேஷன் அட்டை பெற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அடையாள அட்டையில் உள்ள எண் வழங்கப்படும் நபரின் ஆயுள்காலம் முழுமைக்குமானது. இதை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயன்படுத்தலாம். இதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாடு புலனாகும் என்றார் மன்மோகன் சிங்.

""மிகச் சிறிய கிராமத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் விரைவிலேயே நாட்டிலுள்ள அனைவருக்கும் கிடைக்கும் என்பது மிகப் பெரிய விஷயமாகும். வளர்ச்சி மட்டுமே நமது நோக்கமல்ல. ஒருங்கிணைந்த-ஒட்டுமொத்த வளர்ச்சியே நமது இலக்கு,'' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டார்.

21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சியில் தொழில்நுட்பத் துறை மிக முக்கிய பங்காற்றும் என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உறுதியாக நம்பினார். அவரது கனவு இன்று மெய்ப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயம் மேம்படும். ஏனெனில் நலத் திட்டப் பயன்கள் விரைவாகக் கிடைக்கும். இதன் மூலம் எவ்வித முறைகேடும் நிகழாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.