Monday, August 30, 2010

நேபாள எப்.எம். (பண்பலை) ரேடியோக்கள் வாயிலாக இந்தியாவிற்கு எதிராக மாவோயிஸ்டுகள் விஷமபிரசாரம்?

நேபாள எம்.எம். ரேடியோ வாயிலாக இந்தியாவுக்கு எதிராக மாவேயிஸ்ட்கள் விஷமப்பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவின் பீகார், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் இத்தகைய நேபாள எம்.எம். ரேடியோக்கள் பரவலாக ஒலிபரப்பப்பட்டு வருவதாகவும், இதனை முறியடிக்க இம்மாநிலங்களில் கூடுதல் இந்திய எப்.எம். ரேடியோ நிலையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பீகார், உத்தர்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நேபாள நாட்டு எப்.எம். ரேடியோக்கள் மக்களிடையே நன்கு செல்வாக்கு பெற்றுள்ளன.இம்மாநிலத்தில் உள்ள கிராம, பழங்குடியின மக்கள் நேபாள எம்.எம்.ரேடியோக்களை விரும்பி கேட்கின்றனர். மேலும் நோபளத்தில் மாவோயிஸ்ட்டுகள் அந்நாட்டு அரசியலில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால். இந்த அமைப்புகள் நேபாள எம்.எம். (பண்பலை) ரேடியோ வாயிலாக இந்தியாவிற்கு எதிராக விஷமப்பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே இம்மாநிலங்கள் மாவோயிஸ்டுகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில் ரேடியோ வாயிலாக பரப்பப்படும் மாவோயிஸ்டு பிரசாரமாக ஓடுக்குவதற்கு மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இத்தகைய அனுமதியற்ற முறையில் ஓலிபரப்பப்படும் எப்.எம்.ரேடியோக்களை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தது. மேலும் நேபாள எப்.எம். ரேடியோக்களுக்கு போட்டியாக மத்திய அரசு இந்த மாநிலங்களில் கூடுதல் எப்.எம். ரேடியோ நிலையங்களை தொடங்க, அகில இந்திய வானொலிக்கு ரூ. 100 கோடியினை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒதுக்கியிருந்தது. இதே போன்று பாகிஸ்தான் டி.வி.சானல்கள் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும், இதனை முறியடிக்க இம்மாநிலத்தில் இந்திய டி.வி. சானல்கள் அம்மாநில குக் கிராமம் வரை தெரிவதற்காகக கூடுதல் சக்தி மிக்க டிரான்ஸ்மீட்டர் பொருத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூக்கை நுழைக்கிறது சீனா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கில்கிட்டில், சீனா தன் மக்கள் விடுதலை ராணுவ வீரர்களை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்துள்ளது. இதை, சர்வதேச கொள்கை மையம் என்ற அமைப்பின் ஆசியத் திட்ட இயக்குனரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, சீனாவின் செயல்களில் அதிக எச்சரிக்கை காட்டுகிறது இந்திய அரசு.

அருணாச்சலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என்று கூறி அதற்கான வரைபடங்களில் குழப்பம் ஏற்படுத்தி வரும் சீனா, ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலும் தற்போது மூக்கை நுழைக்க ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே, அம்மாநிலத்திலிருந்து சீனாவுக்குச் செல்பவர்களுக்கு, அம்மாநிலம் இந்தியாவுக்கு தொடர்பில்லாத தனிப்பகுதி என்று குறிப்பிடும் வகையில் முத்திரை பதித்து விசா வழங்கியது. இது ஸ்டேபிள் விசா நடைமுறையாகும்.

இந்தியா தலையிட்டு இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்த பின்பு, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து செல்பவர்களுக்கு வழக்கம் போல் விசா வழங்கும் சீனா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவருக்கு மட்டும் விசா வழங்குவதில்லை. அப்படி விசா தரப்பட வேண்டும் என்றால் அம்மாநிலம் "சர்ச்சைக்குரியது' என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று வாதிட்டு வருகிறது.

கடந்த வாரம், இந்திய ராணுவத்தின் வடக்குப் பிரிவின் தலைமைத் தளபதி பி.எஸ்.ஜாஸ்வால், சீனத் தலைநகர் பீஜிங்கில் நடக்க இருந்த ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவருக்கு சீனா விசா தர மறுத்து விட்டது. இதையடுத்து, இந்தியாவில் ராணுவப் பயிற்சிக்காக வர இருந்த இரண்டு சீன ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியா விசா தர மறுத்து விட்டது.இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, சீனா, தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பி.ஓ.கே.,) தன் படைகளைக் குவித்து வருகிறது.

இதுகுறித்து சர்வதேசக் கொள்கை மையத்தின் ஆசிய திட்ட இயக்குனர் செலிக் எஸ்.ஹாரிசன் கூறியிருப்பதாவது:பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் - பல்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மக்கள். இதையடுத்து, சீனாவின் ராணுவமான, "மக்கள் விடுதலை ராணுவ' வீரர்கள் ஏழாயிரத்திலிருந்து 11 ஆயிரம் பேர் வரை அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் அப்பகுதியில், சீனா தன் பிடியை தக்கவைத்துக் கொள்வதற்கு ஏதுவாக, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளை செய்யவும் முனைந்துள்ளது. இதன் மூலம், வளைகுடா நாடுகளுடன் சீனா எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.சீனாவின் இச் செயலை பாகிஸ்தான் ஆதரிப்பது, அது அமெரிக்காவின் கூட்டாளி அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு செலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கடந்த வாரத்தின் இறுதியில் இந்திய ராணுவ அதிகாரிகளோ, சீன ராணுவ அதிகாரிகளோ எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. நேற்று முன்தினம் இந்திய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியத் தரப்பு அதிகாரிகள் சீனாவுக்குச் செல்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அப்படி எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய இந்திய அதிகாரிகள் சிலர்,"சீனாவின் மறுப்பு குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது.இருப்பினும், இருதரப்பு எல்லை அதிகாரிகளுக்கிடையிலும், இந்த விவகாரத்தில் உருவாகியுள்ள முரண்பாடுகள் குறித்து இருதரப்பு உயர் அதிகாரிகள் இடையிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' என்று குறிப்பிட்டனர்.

அருணாச்சல விவகாரம்: புதிய பிரச்னை: இந்நிலையில், சீன நகரமான ஷாங்காயில் கடந்த ஜூலை மாதம் நடந்த சர்வதேச கண்காட்சியில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் சீனர்கள் சிலர் நுழைந்து, இந்திய தேசிய வரைபடம் கொண்ட பிரசுரங்களை எடுத்துச் சென்றதாக புதிய விவகாரம் கிளம்பியுள்ளது.

Wednesday, August 25, 2010

இது நல்லதற்கல்ல...

ஏறத்தாழ 110 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையை உடைய நாடு இந்தியா. இந்த நாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. 15 பொதுத் தேர்தல்களை நடத்திவிட்டிருக்கிறோம். உலகளாவிய அளவில் ஒரு பொருளாதார வல்லரசாக அடுத்த பத்து ஆண்டுகளில் கோலோச்சும் வாய்ப்புடைய நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று என்கிற நிலையையும் அடைந்துவிட்டோம். ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் நாம் மிகவும் கவனக் குறைவாகவும், எச்சரிக்கை இல்லாமலும் இருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அணு ஆயுதச் சோதனை நடத்தி விட்டோம் என்பதாலேயே பாதுகாப்புத் தேவைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகக் கருதிவிட முடியுமா, என்ன? ராணுவத்துக்கும், கப்பற்படைக்கும், விமானப்படைக்கும் தளவாடங்கள் வாங்குவதிலும், ராணுவக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருப்பதிலும்தானே நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.

இந்திய ராணுவத்துக்கு சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, நவீன பீரங்கிகள் வாங்கி 26 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? நமது ராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியுமா?

26 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழலைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட ராணுவத் தளவாடக் கொள்முதல் முயற்சி, இந்திய ராணுவத்தை முடக்கிவிட்டிருப்பதைப் பற்றி நமது ராணுவ அமைச்சகமோ, ஆட்சியாளர்களோ கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஆனால், ராணுவ அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுங்குகிறார்கள்.

போபர்ஸ் பிரச்னையில் ஊழலைப் பற்றிய விசாரணை முடிவுக்கு வரவில்லை என்பதும், யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் போயிற்று என்பது தெரியவில்லை என்பதும், இந்த விவகாரத்தில் முக்கியப் புள்ளியான குவாத்ரோச்சியை அரசே தப்பவிட்டதுடன், பிடிக்கும் முயற்சியையும் அநேகமாகக் கைவிட்டு விட்டது என்பதும் ஒரு தனிக்கதை. போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் நடைபெற்ற ஊழல் ஒருபுறம் இருந்தாலும், போபர்ஸ் பீரங்கிகள் தரத்தில் குறைந்தவை அல்ல என்பதை, கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் உறுதிப்படுத்தினார்கள். மலை உச்சிகளில் இருந்து இந்திய ராணுவம் போரிட மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னவோ போபர்ஸ் பீரங்கிகள்தான்.

கடந்த எட்டு ஆண்டுகளாகவே, இந்திய ராணுவம் தனது தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில் முனைப்பாக ஈடுபட்டு, அதற்காக மத்திய ராணுவ அமைச்சகத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறது. ராணுவத்துக்காகத் தளவாடங்களை வாங்கப்போய் அது ஊழல் குற்றச்சாட்டில் முடிந்துவிடுமோ என்கிற பயத்தில், ராணுவ அமைச்சகமோ ஏதாவது காரணம்காட்டித் தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது.

எட்டு ஆண்டு நச்சரிப்பின் பயனாக, இழுத்துச் செல்லும் வகையிலான 155 மி.மீ. பீரங்கிகளை வாங்குவதற்கான சோதனைத் தேர்வு கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. இந்த வகை பீரங்கிகளை வழங்குவதற்காகக் கோரப்பட்ட சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளில் இரண்டே இரண்டு தயாரிப்பாளர்கள்தான் கலந்துகொண்டனர். அவர்களில் ஒன்று சுவீடன் நாட்டு பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் "நவீனமயமாக்கப்பட்ட' போபர்ஸ் பீரங்கி. இன்னொன்று, சிங்கப்பூர் டெக்னாலஜீஸ் கைனடிக்ஸ் என்கிற நிறுவனத்தின் பீரங்கி.

கடைசி நிமிடத்தில், சிங்கப்பூர் நிறுவனத்தைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருப்பதாக மத்தியப் புலனாய்வுத் துறை அறிவிக்க, ஒரே ஒரு ஒப்பந்தப்புள்ளி மட்டுமே உள்ள நிலையில், போபர்ஸ் பீரங்கிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மீண்டும் பீரங்கி வாங்கும் முயற்சி தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

நியாயமாகப் பார்த்தால், சிங்கப்பூர் நிறுவனத்துக்கு இத்தனை தவணை சலுகைகள் வழங்கப்பட்டதே தவறு. பரிசோதனைக்கு அழைத்த பிறகு, தவிர்க்க முடியாத சூழ்நிலையைக் காரணம் காட்டி, ஒரு நிறுவனம் 15 நாள்கள் அவகாசம் கோர வழியிருக்கிறது. சிங்கப்பூர் நிறுவனமோ மூன்று முறை இதுபோலப் பரிசோதனைக்கு நாள்கள் அறிவிக்கப்பட்டு, கடைசி நிமிடத்தில் ஏதாவது சாக்குப்போக்குக் கூறி, சோதனையைத் தள்ளிப்போட்டு வருகிறது. 2008-லிருந்து இதுதொடர்ந்து வருவது போபர்ஸ் நிறுவனம் பீரங்கிகளை வழங்குவதைத் தடுப்பதற்காகக்கூட இருக்கலாம்.

பீரங்கியின் தரம் நன்றாக இருந்தால், போட்டிக்கு வேறு தளவாடம் இல்லாத நிலையிலும் அந்த பீரங்கியை வாங்கும் அதிகாரம் ராணுவத்துக்கு உண்டு. ஒரு நிறுவனத்திடம் நேரடியாக வாங்குவதைத் தடை செய்வதே, அதிகமான விலைக்கு ஒரு பொருள் வாங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விலை நிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்தான் சோதனைக்கே அழைக்கிறார்கள் எனும்போது, சிங்கப்பூர் நிறுவனம் சி.பி.ஐ.யால் பிரச்னைக்குரியதாக, வேறு பல விஷயங்களில் தரமற்ற தளவாடத் தயாரிப்பு, லஞ்சம் கொடுக்க முயற்சி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்பட்டதாக அடையாளம் காட்டப்பட்ட நிலையில், போபர்ஸ் பீரங்கிகளையே வாங்கினால்கூடத் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

அது போபர்ஸ் பீரங்கியா, வேறு ஏதாவது பீரங்கியா என்பதல்ல பிரச்னை. ஊழல் இல்லாமல், தரமான ராணுவத் தளவாடங்கள் பெறப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படைத் தேவை. எப்போதோ ஊழல் நடந்தது என்பதைக் காரணம் காட்டி, ராணுவத்துக்குப் புதிய தளவாடங்களே பெறப்படாமல், தேசத்துக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்த முற்படுவது முட்டாள்தனம். குறைந்தபட்சம், 155 மி.மீ. பீரங்கியை உருவாக்கிட ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக(டிஆர்டிஒ)த்தின் முயற்சியை ஊக்கப்படுத்தவாவது வேண்டும்.

Thursday, August 19, 2010

பயமல்ல... நிஜம்!

பசுமை இல்ல வாயு பற்றியும், புவி வெப்பமடைதல் பற்றியும் யாராவது எழுதினாலோ, பேசினாலோ அவர்கள் தேவையில்லாமல் மக்களைப் பயமுறுத்தும் எதிர்மறைச் சிந்தனையாளர்கள் என்பதுபோல மிகவும் சாதுர்யமாகத் தங்களது விளம்பர யுக்திகளின் மூலம் வர்ணிக்க முற்படுகின்றன, பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமீட்டும் எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று எச்சரித்தால், மனித இனம் வசதியாக வாழ்வதைப் பார்க்கப் பிடிக்காத வயிற்றெரிச்சல் வாதிகள் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

இயற்கையுடன் விளையாடத் தொடங்கி இருக்கிறோம். ஒருசில தலைமுறைகள் மனித இனம், அதிலும் ஒரு சிறிய விழுக்காடு மட்டும், வசதியாக வாழ்வதற்காக வருங்கால உலகத்தையே பாலைவனமாக்கும் முயற்சி அரங்கேறி வருகிறது. இதன் விளைவுகள் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கிய பின்னும்கூட மனிதன் சுதாரித்துக் கொண்டு, வசதிகளைச் சுருக்கிக் கொண்டு வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முன்வராமல் போனால் அதை என்னென்று கூறுவது?

இந்த ஆண்டு ரஷியா இதுவரை காணாத வெப்பத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட ரஷிய நாட்டு மக்கள், ஏரிகள், நதிகள் என்று பெரும் திரளாகப் படையெடுத்துக் கோடை வெயிலின் வெப்பத்தை எதிர்கொள்ள முற்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 233 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். பூமி வெப்பமடைதல் பொய்யென்றால், ரஷியாவில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்குவானேன்?

இந்தியாவுக்கு வருவோம். இமயமலையில் பனிப்பாறைகள் உருகி, பனிச் சிகரத்தின் உயரம் கணிசமாகக் குறைந்து வருகிறதே, அது ஏன்? டேவிட் ப்ரிஷியர்ஸ் என்கிற அமெரிக்கர் 1983-லிருந்து ஐந்து தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோதெல்லாம் இமயமலையையும், அதன் பனிப்பாறைகளையும், சிகரங்களையும் தனது கேமராவில் பதிவு செய்து வைத்திருப்பவர். பனிச்சிகரங்களின் உயரம் குறைந்து வருவது அவருக்கு அதிர்ச்சி அளித்ததால், முன்பு எந்த இடத்திலிருந்து ஒரு சிகரத்தைப் படம் பிடித்தாரோ அதே இடத்திலிருந்து மீண்டும் படமெடுத்துப் பதிவு செய்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி.

சுமார் நாற்பது மாடிக் கட்டடம் நான்கு மாடிக் கட்டடமாகச் சுருங்கினால் எப்படி இருக்கும், அதுபோல பல பனிச் சிகரங்கள் சுருங்கி இருப்பதை டேவிட் ப்ரிஷியர்ஸ் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறார். ருங்பெக் பனிச் சிகரம் செங்குத்தாக சுமார் 330 அடி உயரம் குறைந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.

இமயமலையிலுள்ள பல பனிச் சிகரங்கள் அசுர வேகத்தில் சுருங்கத் தொடங்கி இருப்பதை சீன ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படியே போனால், கைலாயம்கூடக் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா போன்ற பனிச் சிகரங்கள் ஆண்டுக்கு 26 அடி உயரம் குறைந்து வருவதாகத் தெரிகிறது.

இதற்கு மூல காரணம் அளவுக்கு அதிகமாகக் கட்டுப்பாடற்ற முறையில் வெளியேற்றப்படும் கரியமில வாயு. வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், வெளியேற்றப்படும் கரியமில வாயுவை உள்வாங்க இயற்கையால் முடியாமல் போகிறது. காற்று மண்டலத்தில் வியாபித்துவிட்டிருக்கும் கரியமில வாயுவால் வானமண்டலமே வெப்பமடைந்திருக்கிறது.

மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் மழையின் அளவு குறைந்து விட்டிருக்கிறது. பருவநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, உருகும் பனியை ஈடுகட்டும் அளவுக்கு குளிர்காலத்தில் பனி உறைவது இல்லை. மேலும், பெட்ரோல், டீசல் புகையிலிருந்து வெளியேறும் கரியமில வாயு பனிச் சிகரங்களில் படர்வதால் வழக்கத்தைவிட அதிகமாக பனிச்சிகரம் உருகிவிடுகிறது; பனி உறைவதும் இல்லை.

புவி வெப்பமடைதல், பனிச் சிகரங்கள் உறைதல் போன்றவைகளின் தொடர்ச்சியாக நாம் சந்திக்கப் போகும் சவால் இன்னொன்றும் இருக்கிறது. விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த மாதம் வெளியாகி இருக்கும் "சயன்ஸ்' இதழ், இதன் தொடர்விளைவுகள் சிந்து மற்றும் பிரம்மபுத்ரா நதிகளைப் பெரிய அளவிலும், கங்கை, சீனாவில் பாயும் மஞ்சள் நதி மற்றும் யாங்க்ட்ஸ் நதிகளை சிறிய அளவிலும் பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறது.

சிந்து மற்றும் பிரம்மபுத்ரா சமவெளிப் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 60 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் தன்மையது இந்த பனிச் சிகரங்கள் உருகும் போக்கு என்பதை நாம் உணர்வதாகவே தெரியவில்லை. எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், குறிக்கோளையும் நிர்ணயிப்பது பல பில்லியன் டாலர் லாபம் மட்டுமே. பெருவாரியான மத்தியதர, மேல் மத்தியதர, பணக்கார மக்களின் எண்ணப்போக்கை நிர்ணயிப்பது இன்று அனுபவிக்கும் கார், ஏ.சி., குளிர்பதனப் பெட்டி, விமானம் போன்ற வாழ்க்கை வசதிகள் மட்டுமே.

"எப்போதோ வரப்போகும் ஆபத்தைப் பற்றி இப்போதே சிந்தித்துக் கவலைப்படுவது போன்ற முட்டாள்தனம் இருக்க முடியுமா? புவி வெப்பமடைதல், கரியமில வாயு, பனிச் சிகரங்கள் உருகுதல் என்றெல்லாம் இந்த எதிர்மறைச் சிந்தனையாளர்கள் ஏன் பயமுறுத்த வேண்டும்? நாம் அப்போது உயிரோடு இருக்கப் போகிறோமா? இருப்பதுவரை சுகமாக வாழ்வதை அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏன் நாளையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்'' என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி-

உங்களுக்கெல்லாம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் கிடையாதா? வருங்காலச் சந்ததியினரைப் பற்றிய கவலையே உங்களுக்கு இல்லையா?

வேண்டாம் வேதாந்தம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆறுதல் தரும் இரண்டு விவகாரங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன. முதலாவதாக, நாட்டில் முறைகேடான கனிமச் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்த ஒரு குழுமத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. இரண்டாவது, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் பாக்சைட் கனிமச் சுரங்கத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அமைத்த குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த இரண்டுமே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் விவகாரங்கள். மத்திய அரசு இப்போதுதான் ஒன்றில் நடவடிக்கை எடுக்கிறது. இன்னொன்றில் நடவடிக்கை எடுக்க ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பும் குரல்கள் யார் காதிலோ விழுந்து ஏதோ விஷயங்கள் நடக்கவே செய்கின்றன என்பது உறுதிப்படுவதன் மூலம் இந்த விழிப்புணர்வுக் குரல்களுக்கு வலுவும் தெம்பும் ஏற்படும்.

மத்திய அரசு அமைத்துள்ள குழு, நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி, இரும்பு, மக்னீசியம் தாதுக்கள் முறைகேடாகச் சுரண்டப்படுகின்றன என்பது குறித்து ஆந்திர மாநிலம், ஜார்க்கண்ட், கர்நாடகம், சத்தீஸ்கர் ஒரிசா ஆகிய இடங்களில் ஆய்வுகள் செய்து தனது அறிக்கையை அளிக்கும்.

கனிமங்களை முறைகேடாகத் தோண்டியெடுத்தல் சாத்தியமா என்ற ஐயம் எழக்கூடும். ஆம், அவை நடைபெறுகிறது என்பதும், சில இடங்களில் மாநில அரசுகளின் மறைமுக ஒத்துழைப்புடனும், சில இடங்களில் மிக ரகசியமாகவும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், ஒரு சுற்றுச்சூழல் இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முறைகேடாகத் தோண்டியெடுக்கும் நிலக்கரியை இங்குள்ள ஆதிவாசிகள் மலைகளின் குறுக்கு வழியில் சுமந்து செல்கிறார்கள். இவர்களை வழிமறிக்கும் வனத்துறை அதிகாரிகளுக்குக் கொடுக்கும் மாமூல்போக, இவர்களது கூலியில் ஒரு நாளைக்கு ரூ.50 கிடைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளுக்கு இது கடத்தல் என்றோ முறைகேடு என்றோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது ஒருநாள் கூலி மட்டும்தான். அவர்கள் வாழ்க்கை அப்படியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த முறைகேடான கனிமச் சுரங்கங்களும் தாதுப்பொருள் கடத்தலும் ஆதிவாசிகளின் உழைப்பைச் சுரண்டுவதும் ஒருபுறமிருக்கட்டும், அரசு அனுமதியுடன் நடைபெறும் சுரங்கங்களில்கூட, அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவு.

தற்போது கர்நாடக மாநிலத்தில் இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான பனிப்போர் என்கிற உண்மை ஒருபுறம் இருக்க, இதில் கர்நாடக அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

உலகிலேயே மிகச் சிறந்த, தரமான இரும்புத் தாது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில்தான் கிடைக்கிறது. இதற்காக அரசு நிர்ணயித்துள்ள ராயல்டிதொகை ஒரு டன் இரும்புத் தாதுக்கு | 27. ஆனால் உலகச் சந்தையில் பெல்லாரி இரும்புத் தாதுவின் விலை டன் | 6,000 முதல் | 7,000 வரை. சுரங்கம் தோண்டும் செலவு, போக்குவரத்துச் செலவு, வேலையாள் கூலி, கட்சிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அளிக்கும் லஞ்சம் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட ஒரு டன் இரும்புத் தாதுக்கு குறைந்தது | 5,000 கிடைக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. அப்படியானால், ஏன் அரசு இவ்வளவு மலிவாக ராயல்டி தொகையை நிர்ணயிக்க வேண்டும்?

இது கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்ல, ஆந்திரம், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும்கூட, கனிமங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் உரிமத் தொகைக்கும் (ராயல்டி) இந்த தனியார் நிறுவனங்கள் பெறும் லாபத்துக்கும் குறைந்தபட்சம் 1000 விழுக்காடு வித்தியாசம் இருக்கிறது. முதலில் இந்த வேறுபாட்டைக் களைந்தாலே அரசுக்கு மிக அதிகமான வருவாய் கிடைக்கும். முறைகேடாக கனிமங்களைச் சுரண்டுபவர்களைவிட, முறையாகச் சுரங்கம் அமைத்து சுரண்டுபவர்கள்தான் மிகமிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.

ஒரிசாவில் வேதாந்தா என்கிற நிறுவனம் நியம்கிரி என்ற மலையில் தொடங்கவிருந்த பாக்ûஸட் கனிமம் தோண்டும் திட்டத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று இது தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்திருப்பதுடன், வேதாந்தா நிறுவனம் எவ்வாறு சுற்றுச்சூழல் விதிமுறைகள் பலவற்றை மீறியுள்ளது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

"....இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதிக்கச் செய்வதுடன், இரு பழங்குடி மக்களின் நலனுக்கு முரணாக அமையும் இந்தத் திட்டத்தை அனுமதித்தால், ஆதிவாசிகளுக்கு இந்த ஆட்சியாளர்கள் மீதும் அவர்களது சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்' என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இன்று இந்த மாநிலங்களில் மாவோயிஸ்ட் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே, ஆதிவாசிகள் நம் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான்.

கனிம ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸஸ், அண்மையில் வேதாந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்போவதாகக் கூறி, 2400 ஹெக்டேர் நிலத்தை, பூரி-கொனார்க் நெடுஞ்சாலையில் வாங்கியது பெரும் பிரச்னையானதால், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது, இதே நிறுவனத்தின் பாக்ûஸட் திட்டத்துக்கும் எதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பழனி கோயிலில் மூலவர் முருகனின் நவபாஷாண சிலையின் முன்புறம் அப்படியே இருக்க பின்புறம் நிறையச் சுரண்டப்பட்டு, சிலையே பாதிப்படைந்ததாகப் புகார்கள் உண்டு. சிலையின் பின்புறத்தைப் பார்த்தவர் இல்லை. மத்திய அரசு கடுமையாகவும், நியாயமாகவும், முதுகெலும்புடனும் செயல்படாவிட்டால் இந்தியாவையும் கூட பழனியாண்டவர் நவபாஷாண சிலைகதை போல ஆக்கிவிடுவார்கள்.

எல்லாம் விதிப்பயன் என்பதுதானே வேதாந்தத்தின் அடிப்படைத் தத்துவம். வேதாந்தத்தை நம்பும் இந்தியாவுக்கு வேதாந்தம் புகட்ட வேதாந்தா போன்ற நிறுவனங்கள் கச்சை கட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. எல்லாம் விதிப்பயன், வேறென்ன?

Tuesday, August 17, 2010

சூப்பர் பக்” கிருமியை கண்டு பயப்பட தேவை இல்லை: சென்னை விஞ்ஞானி தகவல்

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் “சூப்பர் பக்” எனும் புதுவகை பாக்டீரியா கிருமி பரவி உள்ளதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

அந்த புதுவகை பாக்டீரியாவுக்கு அவர்கள் புதுடெல்லி பெயரையும் சேர்த்து வைத்துள்ளனர். இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே “சூப்பர் பக்” கிருமியை ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் சென்னை தரமணியில் உள்ள ஏ.எல். முதலியார் முதுநிலை அடிப்படை மருத்துவ ஆய்வு மையத்தில் படித்தவர். தற்போது லண்டனில் இங்கிலாந்து விஞ்ஞானி டிமோத்தி வால்சுடன் சேர்ந்து சூப்பர் பக்கிருமி பற்றி விரிவான ஆய்வு செய்து வருகிறார்.

விஞ்ஞானி கார்த்திகேயன், தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து கூறியதா வது:-

சூப்பர் பக்கிருமி பற்றி உலகின் பல நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் சூப்பர்- பக்கிருமிக்கு ஒவ்வொரு பெயர் வைத்துள்ளனர்.

ஐரோப்பிய விஞ்ஞானிகள் மட்டும்தான் சூப்பர்- பக்கிருமிக்கு புதுடெல்லி பெயரை சேர்த்து வைத்துள்ளனர். இது தொடர்பாக எனது ஆய்வறிக்கை திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி பேசி வருகிறேன்.

சூப்பர்- பக்கிருமி பற்றி 6 மாதங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இந்தியாவில் இருந்து இந்தகிருமி பரவியதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

சூப்பர் பக்கிருமி எந்த மருந்துக்கும் கட்டுப்படாது என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அதை கட்டுப்படுத்தி விட முடியும். எனவே சூப்பர்-பக் கிருமிபற்றி பயம் வேண்டாம்.

சூப்பர்- பக்கிருமி பற்றி தொடர்ந்து நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். விரைவில் அதற்குரிய மருந்துகண்டு பிடிக்கப்படும்.

இவ்வாறு விஞ்ஞானி கார்த்திகேயன் கூறினார்.

எம்.பி.,க்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு தேவையா? முடிவு எடுக்காமல் அமைச்சரவை திணறல்

எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்களை மூன்று மடங்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு நடக்கவில்லை. இந்த அதிகரிப்பு தேவையா என, அமைச்சர்கள் பலர் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால், ஒருமித்த கருத்து ஏற்படாமல், இதுதொடர்பாக முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை நேற்று தள்ளி வைத்தது.

எம்.பி.,க்கள் தற்போது மாதம் ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதுபோக பார்லிமென்ட் நடக்கும் நேரங்களிலும், சபை கமிட்டியின் அமர்வுகள் நடக்கும் போதும், தினமும் ஆயிரம் ரூபாய் அலவன்ஸ் பெறுவர். இதுபோக மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு எம்.பி., க்கும் தொகுதி அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும், அலுவலக அலவன்சாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. குறிப் பிட்ட அளவுக்கு இலவச விமான பயணங்கள் மற்றும் ரயில் பயணங்கள், வாடகை இல்லாத வீடுபோன்ற சலுகைகளும் உண்டு. இந்நிலையில், ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது. இதனால், தங்களின் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசில் செயலர் பதவியில் இருப்பவர் மாதம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். அதை விட ஒரு ரூபாயாவது அதிகமாக தங்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் எம்.பி.,க்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கேற்ற வகையில், காங்கிரஸ் எம்.பி., சரண்தாஸ் மகந்த் தலைமையிலான குழுவினரும் எம்.பி.,க்களின் சம்பளத்தை 80 ஆயிரத்து ஒன்றாக நிர்ணயிக்க வேண்டும் என, பரிந்துரை செய்தனர். இந்த குழுவில் சரண்தாஸ் தவிர, பா.ஜ.,வைச்சேர்ந்த அலுவாலியா, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மைத்ரேயன், காங்கிரசை சேர்ந்த ராஜிவ் சுக்லா, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ராம்கோபால் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இருந்தாலும், எம்.பி.,க்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, பார்லிமென்ட் விவகார அமைச்சகம் யோசனை தெரிவித்தது. இந்த யோசனையை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பான மசோதா பார்லிமென்டின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எதிர்ப்பு: இந்நிலையில், எம்.பி.,க் களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை நேற்று பரிசீலித்தது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "பணவீக்கம் அதிக அளவில் உள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். விவசாயிகள் தற்கொலையும் ஆங்காங்கே நடக்கிறது. காமன் வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெருமளவில் ஊழல் நடந்து உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, அந்த விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த மோசமான சூழ்நிலையில், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது தேவையா?' என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்தும் விவகாரத்தில், முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை தள்ளி வைத்தது. அதேநேரத்தில், "எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது அவசியம்' என, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் கூறியுள்ளனர்.

பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் காங்கிரஸ் எம்.பி., ராஜிவ்சுக்லா கூறியதாவது: உலகிலேயே இந்தியாவின் தான் எம்.பி.,க்களின் சம்பளம் குறைவாக உள்ளது. அரசில் எழுத்தர் பணியில் உள்ளவர் பெறுவதை விட குறைவான சம்பளம் பெறுகின்றனர். செயலர்களுக்கு மேம்பட்டவர்கள் எம்.பி.,க்கள். அவர்களின் சம்பளத்திற்கும், எம்.பி.,க்களின் சம்பளத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பார்க்க வேண்டும். எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்துவது மிகவும் அவசியம். முன்னர் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெற்ற அரசு செயலர் தற்போது 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஆனால், எம்.பி.,க்கள் சம்பளம் நான்காயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாகத்தான் உயர்த்தப்பட்டது. கவுரவமான சம்பளத்தை எம்.பி.,க்கள் எதிர்பார்க்கும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன். எம்.பி.,க்களின் பணி ஒன்றும் நிரந்தரமானதல்ல. இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார். இதேபோல், பா.ஜ., எம்.பி.,க்கள் சிலரும் எம்.பி.,க்களின் சம்பளத்தை உயர்த்த வேண் டியது அவசியம் என, கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் இரு கட்சி எம்.பி.,க்களும் ஒன்றாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் உலகை அச்சுறுத்தும் 5 பயங்கரவாத குழுக்கள்

உலகை அச்சுறுத்தும் ஐந்து பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் செயல்படுவதாக அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ரிச்சட் ஹால்புரூக் கூறினார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சார்லி ரோஸ் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானின் சட்டம், ஒழுங்கு செயல்படாத பழங்குடியினப் பகுதிகளில் இவர்கள் பதுங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியது:

சர்வதேச அளவில் அச்சுறுத்தலை விளைவிக்கக் கூடிய அல்-காய்தா, தலிபான் ஹக்கானி, லஷ்கர் இ தொய்பா, ஆப்கன் தலிபான், பாகிஸ்தான் தலிபான் ஆகியன மிக முக்கியமான குழுக்களாகும். இவை அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மீது தாக்குதல் தொடுப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டவை.

அமெரிக்காவின் பிரதான எதிரி அல்-காய்தா. இந்த பயங்கரவாத குழு பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய பழங்குடியின பகுதிகளிலிருந்து செயல்படுகிறது. இப்போது இப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. மிகவும் ஆபத்து நிறைந்த இக்குழுவினர் செயல்படும் பகுதி முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

அல்-காய்தா அமைப்பு அமெரிக்கா மற்றும் பிரிட்டனை மட்டுமே குறிவைத்து செயல்படுகிறது. இவை தவிர, ஆப்கனிலிருந்து செயல்படும் ஆப்கன்-தலிபான் குழுவும் பிரதான குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இப்போது பாகிஸ்தான்-தலிபான் அமைப்பினர் பாகிஸ்தானில் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியூயார்க் நகரில் கடந்த மே 1-ம் தேதி டைம்ஸ் சதுக்கத்தில் கார் வெடி குண்டு மூலம் தகர்க்க முயன்ற பைசல் ஷாஜத்து, பாகிஸ்தானில் உள்ள தலிபான் குழுவிடம் பயிற்சி பெற்றவர். நல்லவேளையாக இவருக்கு சரிவர பயிற்சி அளிக்கப்படவில்லை. இல்லையெனில் டைம்ஸ் சதுக்க தகர்ப்பு சம்பவம் நிறைவேறியிருக்கும்.

ஹக்கானி குழுவினர் தனி குழுவாக வடக்கு வஜிரிஸ்தானில் செயல்படுகின்றனர். இங்கிருந்து காபூலில் சதித் திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.

அமெரிக்கர்கள் அதிகம் கவலைப்படாத ஒரு குழு உள்ளதென்றால் அது லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான். இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களை செயல்படுத்துகிறது. 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதும் இக்குழுவினர்தான்.

இந்த ஐந்து குழுக்களும் கலிபோர்னியா பரப்பளவு கொண்ட பாகிஸ்தானின் பழங்குடியின பகுதியில் செயல்படுகின்றனர். ஆப்கனிலிருந்து அமெரிக்க படையை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் எஞ்சிய படையைக் கொண்டு இத்தகைய பயங்கரவாத குழுக்களை அழித்துவிட முடியும். அந்த அளவுக்கு ஆப்கன் படையை கூட்டுப் படை தயார்ப்படுத்திவிடும்.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இது குறித்து பரிசீலித்து முடிவு செய்வார் என்றார் ஹால்புரூக்.

கிராம பி.பீ.ஓ.க்களுக்கு தமிழக அரசு மானியம்

கிராமப்புறங்களில் பி.பீ.ஓ., (வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனம்) தொடங்க ஒரு தனியார் நிறுவனத்துக்கு | 7.5 லட்சம் வரை மானியம் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம், நகரங்களில் மட்டுமே இயங்கி வரும் பி.பீ.ஓ. நிறுவனங்கள் கிராமப்புறங்களை நோக்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

கிராமப்புறங்களிலும் பி.பீ.ஓ.க்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, கிராமப்புற பி.பீ.ஓ.க்களுக்கான கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், மதுரை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமல்லாது, மாநிலங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும் பி.பீ.ஓ. நிறுவனங்களைக் கொண்டு செல்ல வகை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு: கிராமப்புற பி.பி.ஓ.க்களை அமைக்கும் பணியில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கியப் பங்காற்றும். அதாவது, பி.பீ.ஓ. நிறுவனங்களைத் தொடங்க யாரெல்லாம் ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு தகுதியானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.

பி.பீ.ஓ. நிறுவனங்களை உருவாக்க காரணமாக அமையும் தொழில் நிறுவனங்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அமைப்புகளுக்கும் இடையே பாலமாக இருந்து ஆலோசனைகளையும், போதிய உதவிகளையும் தகவல் தொழில்நுட்பத் துறை அளிக்கும்.

நிதி உதவி: கிராமப்புற பி.பீ.ஓ.க்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு இரண்டு

வகைகளில் நிதி உதவி அளிக்கப்படும். ஒன்று மூலதன நிதியுதவி, மற்றொன்று பயிற்சிக்கான நிதியுதவி.

குறைந்தது 100 பேருடன் மூன்று ஆண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய

பி.பீ.ஓ. நிறுவனங்களுக்கு 15 சதவீதம் அதாவது | 3 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும். பி.பீ.ஓ. அமைப்பதற்கான வன்பொருள்கள் உள்ளிட்ட கருவிகளைப் பெற இந்த மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்றொன்று, பயிற்சிக்கான மானியமாக அரசு அளிக்கிறது. 100 பேருக்கு 3 மாதங்கள் பயிற்சியும், அதன்பின் 9 மாதங்கள் பணியும் வழங்கும் நிறுவனத்துக்கு மானியம் அளிக்கப்படும்.

நபர் ஒருவருக்கு மாதத்துக்கு | 1,500 வீதம் 3 மாத பயிற்சி காலத்துக்கான உதவித் தொகை மொத்தம் | 4.5 லட்சம் வழங்கப்படும். பயிற்சியையும், பணியையும் வழங்கிய ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தொகை அளிக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் வெளியிட்ட அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பணிகள்? கிராமப்புற பி.பீ.ஓ.க்கள் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விவரங்களைத் திரட்டுதல், அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்தல், தகவல்கள் மேலாண்மை, தகவல்களை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

குரல் வழியிலான பி.பீ.ஓ.க்கள், அதாவது ஒரு நிறுவனத்தின் சேவைகளை தொலைபேசி வழியாக தெரிவிக்கும் பணியும், வர்த்தக ஆய்வு, சர்வே, விற்பனை போன்ற பணிகளும் கிராமப்புற பி.பீ.ஓ.க்கள் வழியாக செய்யப்படும்.

Friday, August 13, 2010

பெரியகோயில் 1000-வது ஆண்டுவிழா: தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் சிறப்பு நிகழ்ச்சிகள்- துணைவேந்தர் ம.ராசேந்திரன் அறிவிப்பு

தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழா தொடர்பாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

÷பல்வேறு சிறப்புகள் வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு செப்டம்பர் 25, 26-ம் தேதிகளில் 1,000-வது ஆண்டு விழா நடைபெறவுள்ளது.

÷முதல் நாள் விழாவில் பெரிய கோயிலில் 1,000 நடனக் கலைஞர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், நகரில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளும், 2-ம் நாளில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், பெரிய கோயிலில் பொது அரங்கமும், திலகர் திடலில் ராஜராஜ சோழன் உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா மற்றும் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் பெரிய கோயிலின் 1,000-வது ஆண்டு விழாவின் போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பங்கு பற்றி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராசேந்திரன் விளக்கினார்.

""தஞ்சை பெரிய கோயிலுக்குள் ஓதுவார்களை நியமித்து, திருமுறை பாடவைத்து தமிழ் மொழியை ஆலயத்துக்குள் கொண்டு சென்றவர் மாமன்னர் ராஜராஜ சோழன்.

÷தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூருக்கோ, தனிப்பட்ட பக்தி நெறிக்கோ மட்டும் பெருமை சேர்ப்பதாக இல்லை. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைப்படத்தக்கதாக, ஏன் இந்தியா முழுவதும் பெருமைப்படத்தக்கதாக விண்ணுயர நிற்கிறது.

÷சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த விஜயாலயச் சோழ அரச பரம்பரையில் திலகமாக விளங்கிய முதலாம் ராஜராஜ சோழனால் தஞ்சைப் பெரிய கோயில் எழுப்பப்பட்டது.

÷தென்கிழக்கு ஆசிய நாடுகளை வென்று சோழர் ஆட்சியை சிறப்புறச் செய்தவர் ராஜராஜ சோழன். ராஜராஜ சோழன் தமிழகத்தின், ஏன் இந்திய மன்னர்களில் சிறந்தவர். தஞ்சையைச் சுற்றி எந்த மலைக்குன்றும் இல்லை. அப்படியிருக்க கல்களால் எழுப்பப்பட்ட பெரிய கோயிலுக்கு எங்கிருந்து கல் கொண்டு வரப்பட்டது, எப்படி கொண்டு வரப்பட்டது, எப்படி கட்டடப்பட்டது என்பது இப்போதுள்ள அறிவியல் யுகத்தில் புரியாத புதிராக, புதிர்களின் கொள்கலனாக உள்ளது.

ராஜராஜனின் ஆட்சி முறை இன்றைக்கும் பயன்படக்கூடிய நிர்வாக முறையாக இருக்கிறது. ஆவணப்படுத்துவதில் ராஜராஜ சோழனைப் போல வேறு யாரும் செய்திருக்க முடியாது. மக்களாட்சியை விரும்பிய மன்னன் தன்னுடைய பணியையும், தன்னுடன் பணியாற்றியவர்களின் பணியையும் ஆவணமாகப் பதிவு செய்துள்ளான்.

தஞ்சை பெரிய கோயில் 1,000-வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு நாள் ஆய்வரங்கம், இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு என்ற பொருண்மையில் நான்கு அமர்வுகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அமர்விலும் இரு அறிஞர்கள் கட்டுரை அளிப்பர். ஓர் அறிஞர் தலைமை வகிப்பார்.

இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வரங்கம் செப்டம்பர் 24-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. முற்பகல் 11.30 முதல் பகல் 12.30 மணி வரை முதல் அமர்வில் வரலாறு மற்றும் ஆவணப்படுத்துதல் தலைப்பிலும், பகல் 12.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை 2-வது அமர்வில் ஆட்சி முறை மற்றும் வேளாண் தொழில்நுட்பம் தலைப்பிலும், பிற்பகல் 2 முதல் 3 மணி வரை 3-வது அமர்வில் கட்டடக் கலை மற்றும் தொழில்நுட்பம் தலைப்பிலும், பிற்பகல் 3.30 முதல் 4.30 மணி வரை 4-வது அமர்வில் ஆடல் கலை, இசைக் கலை, ஓவியக் கலை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறும்.

கருத்தரங்குக்கு பேராசிரியர்கள் ஜார்ஜ் மிச்சல் (லண்டன்), கபிலா வாத்சாயனா (தில்லி), ரொமிலா தாப்பர் (தில்லி), கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜன் குருக்கள், பேராசிரியர்கள் கேசவன் வெளுத்தாட் (தில்லி), செம்பகலட்சுமி (சென்னை), சுப்பராயலு (புதுச்சேரி), பேராசிரியர் ஓவியர் சந்துரு (சென்னை), முனைவர் இரா. நாகசாமி, முனைவர் பத்மா சுப்பிரமணியம் (சென்னை), முனைவர் கணபதி ஸ்தபதி (சென்னை), முனைவர் சத்தியமூர்த்தி (சென்னை), ஸ்ரீராமன் (சென்னை) ஆகியோரை அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெரிய கோயில் கட்டடக் கலைத் தொழில்நுட்பங்கள், ஓவியக் கலை வரலாற்றில் பெரிய கோயில், சிற்பக் கலை வரலாற்றில் பெரிய கோயில் ஆகிய நூல்களும், இலக்கியங்களில் பெரிய கோயில் என்ற நோக்கில் பெருவுடையார் உலா - சிவக்கொழுந்து தேசிகர், திருவிசைப்பா - கருவூர்த்தேவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர் திருப்புகழ், சோழர் காலச் செப்பேடுகள், பத்துப்பாட்டு இந்தி மொழி பெயர்ப்பு, பிற நாட்டவர் பார்வையில் தஞ்சை பெரிய கோயில், தமிழர்களின் வணிக வரலாறு, தமிழர்களின் கடல்கள் பயண வரலாறு ஆகிய நூல்களை செப்டம்பர் 25-ம் தேதிக்கு முன்பு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தவிர, தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், பண்டைத் தமிழரின் ஓவியங்கள் ஆகிய நூல்கள் மறு வெளியீடு செய்யப்படும்.

பாரதியாரின் படைப்புகளில் பெரிய கோயில் பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. அப்படி ஏதேனும் குறிப்புகள் கிடைத்தால், அவற்றையும் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார் துணைவேந்தர் ராசேந்திரன்.

ஓமந்தூரார் வளாகத்தில் மேல்சபை உறுப்பினர்களுக்கு 10 மாடி குடியிருப்பு

தமிழ்நாட்டில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேல்சபை உருவாக்கப்படு கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 78 பேர் மேல்சபை உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

இதில், 26 பேர் சட்டசபை உறுப்பினர்கள் மூலமும், 26 பேர் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மூலமும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கான இடத்தில் 7 பேரும், பட்டதாரிகள் சார்பில் 7 பேரும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். 12 பேர் நியமன உறுப்பினர்கள்.

இவர்களை கவர்னர் நியமனம் செய்வார். மேல்சபை உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்களுக்கான குடியிருப்பு சென்னை ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் உள்ளது. இது போல், மேல்சபை உறுப்பினர் களுக்கும் ஓமந்தூரார் தோட்ட வளாகத்திலேயே குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

10 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 100 வீடுகள் இருக்கும். ஒவ்வொரு வீடும் 985 சதுர அடி பரப்பளவு கொண்டதாக அமையும். சுமார் 1.4 ஏக்கரில் கட் டப்படும் இந்த குடியிருப்பை ரூ.34.4 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இதற்கான திட் டத்தை தயாரிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக கட்டிடவியல் நிபுணர்கள் 10 மாடி குடியிருப்புக்கான கட்டிடத்தை உருவாக்குவது மற்றும் அதன் வடிவமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபடு கிறார்கள்.

மேல்சபை உறுப்பினர்கள் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெறுவதற்கான ஆவணங்களை, சில தினங் களில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ஒப்ப டைக்கிறது. அனுமதி கிடைத்த வுடன் 18 மாதங்களில் கட்டி டத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

"பிளாக்பெர்ரி' மீது தடை வருமா? மத்திய அரசு விதித்தது நிபந்தனை

பிளாக்பெர்ரி மொபைல் போன் தகவல்களை இடைமறிக்கும் வசதி தர மறுப்பு தெரிவித்த "ரிம்' நிறுவனத்திற்கு, இந்தியா மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இதற்கு ஒரு முடிவு காணப்படாவிட்டால், தடை விதிக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறது.

பிளாக்பெர்ரி மொபைல் போனை தயாரிக்கும் நிறுவனமான "ரிம்'மின் நடவடிக்கை குறித்து, உள்துறை செயலர் பாதுகாப்பு நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் அதிகாரிகள் நேற்று கூடி விவாதித்தனர். கூட்டம் முடிந்த பின், உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை, தொலைத்தொடர்புத் துறை செயலர் தாமசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "ரிம்' நிறுவன தயாரிப்புகளின் மூலம் பரிமாறப்படும் பேச்சுக்களையும், குறுந்தகவல்களையும் இடைமறிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் கேட்டறியும் வகையில், வரும் 31ம் தேதிக்குள் தொழில்நுட்பத் தீர்வை உருவாக்குங்கள்' என, கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழில்நுட்பத் தீர்வை, வரும் 31ம் தேதிக்குள் உருவாக்கவில்லை எனில், அதன் மேல் அரசின் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து, இந்த இரு சேவைகளை தடை செய்ய ஆவன செய்வோம். தற்போதைய நிலையில், பிளாக்பெர்ரி மூலமான வாய்ஸ் மெய்ல், எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் சேவை ஆகியவை, சட்ட அமலாக்க நிறுவனங்களால் பார்க்க மட்டுமே முடியும். அவற்றை இடைமறித்துக் கேட்க முடியாது. எனவே, "ரிம்' நிறுவனம் குறித்த அரசின் நிலைப்பாடு எந்த வகையில் அமைய வேண்டும் என்பது குறித்தே இன்றைய கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கூட்டம் முடிந்த பிறகு, "ரிம்' நிறுவன உயர் அதிகாரி ஒருவர், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசினார். பிளாக்பெர்ரி தகவல்கள் அனைத்தும் "பிளாக்பெர்ரி என்டர்பிரைஸ் சர்வர்' மூலம் பரிமாறப்படுகின்றன. இந்தத் தகவல்கள் விசேஷக் குறியீடுகள் மூலமே பரிமாறப்படுவதால், சாதா எழுத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட குறியீட்டிலேயே சர்வரில் பதியப்படுகிறது. மீண்டும் இன்னொரு போனுக்கு தகவல் செல்லும்போது மட்டுமே, சாதா எழுத்தில் அனுப்பப்படுகிறது. இந்த விசேஷக் குறியீட்டைப் படிக்கும் உரிமை வேண்டும் என்பது தான், இந்தியாவின் கோரிக்கை.

ஐக்கிய அரபு மற்றும் சவுதி அரசுகள் ஆகியவையும் "ரிம்' கூறுவதை ஏற்கவில்லை. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விஷயத்தில் இந்த மொபைல் போனில் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கண்டறிய முடியாது என்பதே இப்போது பேசப்படும் பெரிய விஷயம். ஆனால், இதே "ரிம்' நிறுவனம் இந்த வசதியை அமெரிக்காவுக்கு தந்திருக்கிறது. அது எப்படி என்று கேட்டால், "கோர்ட் உத்தரவு மூலம் பிளாக்பெர்ரி தகவல்களை இடைமறித்து பெறமுடியும். அம்மாதிரி அனுமதி தர மறுக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் நிபந்தனைகளுக்கு உட்பட வில்லை என்றால், பிளாக்பெர்ரி சர்வீஸ் முடக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இரும்புத்தாது சுரங்கங்கள் மூடலால் கோடிக்கணக்கான வருவாய் இழப்பு

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் மூடப்பட்டுள்ளதால், சென்னை துறைமுகத்தில் அவற்றின் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை துறைமுகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், இரும்பாக மாற்றப்பட்டு, 'ஸ்டீல்' பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதுக்கள், கட்டிகள் மற்றும், துகள்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன.இதில், கட்டியான கற்கள் போன்ற தோற்றம் கொண்ட இரும்புத் தாது. நம் நாட்டில், ஒரிசா மாநிலம், கியாஞ்சோர் மாவட்டத்தில் உள்ள, பர்ப்பில் சுரங்கத்தில், முதல் தர இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன.தென் மாநிலங்களில், கர்நாடக மாநிலம் பெல்லாரி, ஹாஸ்பெட், ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபலாபுரம் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் இருந்தும் இரும்புத் தாதுக்கள் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டு, ஜப்பான், கொரியா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மத்திய அரசு சார்பு நிறுவனமாக செயல்பட்ட, 'மினரல் மெட்டல் டிரேடிங் கார்பரேஷன்' (எம்.எம்.டி.சி.,) மூலம் மட்டுமே இரும்புத் தாதுக்கள் வெட்டி எடுக்கும் பணி முன்பு நடந்தது. அப்போது, துகள்களாக உள்ள தாதின் பயன்பாட்டை உணராமல், உள் நாட்டிலும் அது பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய கொள்கை மூலம், 2003ம் ஆண்டுக்கு பின், தனியாரும் சுரங்கத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, இங்கிருந்து சீன நாட்டிற்கு, கட்டிகள் போன்ற இரும்புத் தாது ஏற்றுமதி துவங்கியது. சீன நாட்டின் இறக்குமதியாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, துகள் தாதுகளும் ஏற்றுமதியாகத் துவங்கியது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் ஆந்திர மாநிலம் ஓபலாபுரம் சுரங்கங்களில், கடந்த ஆண்டு ஜூலை முதல் அரசியல் காரணங்களுக்காக இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு வந்த இரும்புத் தாதுக்கள், சென்னை துறைமுகம் வழியாகவே, அதிகளவில் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதற்காக நாள்தோறும் அங்கிருந்து தலா 50 வேகன் கொண்ட ஐந்து சரக்கு ரயில்கள் மூலம் 11 ஆயிரத்து 200 டன் அளவிற்கு இரும்புத் தாதுக்கள் இங்கு எடுத்து வரப்பட்டன.இதுபோல் ஆண்டிற்கு சராசரியாக சென்னை துறைமுகத்தில் இருந்து 80 லட்சம் டன் வரை, சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்றுமதி தொழிலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், சென்னை துறைமுகத்தில், 'பிளாட்' எனப்படும் யார்டுகளை டெண்டர் மற்றும் வாடகைக்கு எடுத்து அங்கு ரயில் மூலம் எடுத்து வரப்படும் இரும்புத் தாதுக்களை தேக்கி வைத்து ஏற்றுமதி செய்து வந்தனர். இவர்களின் வசதிக்காக சென்னை துறைமுகத்தில் 24 யார்டுகள் உள்ளன. ஒவ்வொரு யார்டு மூலமும் மாதத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு வருமானமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்ததால், யார்டுகளை ஏற்றுமதியாளர்கள் துறைமுக பொறுப்பு கழகத்திடம் திரும்ப ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் துறைமுக பொறுப்பு கழகத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இது மட்டுமின்றி இரும்புத் தாது சரக்குகளை கையாள்வதன் மூலம் ஆண்டிற்கு 83 கோடியே 20 லட்சம் ரூபாய், சென்னை துறைமுகத்திற்கு வருமானமாக கிடைத்தது. ஓர் ஆண்டாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருமானமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஏற்றுமதி மூலம் துறைமுகத்திற்கு மட்டுமின்றி, இரும்புத் தாதுக்களை ஏற்றி வந்ததன் மூலம் ரயில்வே துறைக்கு மாதம்தோறும் கிடைத்து வந்த மூன்று கோடியே 75 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது மட்டுமின்றி, மத்திய வருவாய்த் துறைக்கு ஒரு டன் இரும்புத் தாது ஏற்றுமதி மூலம் கஸ்டம்ஸ் வரியாக 650 ரூபாயும், 'செஸ்' வரி மூலம் ஒரு ரூபாயும் கிடைத்து வந்தது. இவ்வாறு, மாதம் பல கோடி ரூபாய் அளவிற்கு கிடைத்த இந்த வருமானமும் முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும், இரும்பு தாது ஏற்றுமதியாளர்களுக்கும் அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நக்சல்கள் மீது தாக்குதல் நடத்த விமானப்படைக்கு அனுமதி

நக்சலைட்கள் தாக்கும் பட்சத்தில், தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என, இந்திய விமானப் படைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நக்சலைட் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களில் அவர்களை ஒடுக்க, விமானப்படை விமானங்களை பயன்படுத்த வேண்டும் என, விமானப்படை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக பார்லிமென்டிலும் விவாதங்கள் நடைபெற்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்கள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர் என, பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்திருந்தார். தற்காப்புக்காக நக்சலைட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் பட்சத்தில், அதற்காக சிறப்பு அனுமதி பெற தேவையில்லை என, ராணுவ அமைச்சர் அந்தோணியும், கடந்த நவம்பரில் நடந்த பார்லி கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நக்சல் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ராணுவத்தினர் மீது, நக்சலைட்கள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், தற்காப்பு கருதி, ராணுவத்தினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என, விமானப்படைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நக்சலைட்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையில், மிகவும் கடுமையான ஆயுதங்களை உபயோகிக்கக் கூடாது; அவற்றை, விமானப்படை கமாண்டோக்கள் தான் பிரயோகிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக, விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Monday, August 9, 2010

ஜனநாயக போராட்டம் மியான்மரில் அஞ்சலி

மியான்மர் நாட்டில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், ஜனநாயகத்துக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்காக நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மியான்மரில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங் சாங் சூகி, ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், ராணுவ தளபதி நீவின் உத்தரவு படி, வீட்டுச் சிறையில் ஆங் சாங் சூகி அடைக்கப்பட்டார். அவரிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் ராணுவம் தொடர்ந்து ஆட்சியை நடத்தி வருகிறது. ஜனநாயகம் கோரி 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்தது ராணுவ ஆட்சி. ஜனநாயகத்துக்காக உயிர் நீத்தவர்களின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் டின்ட் சான் என்பவர், இறந்தவர்களின் நினைவு தினத்தை ஆன்மிக ரீதியாக அனுசரித்து வருகிறார். யாங்கூனில் இதையொட்டி புத்த பிட்சுகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான புத்த பிட்சுகள் தலைமையில் நினைவாஞ்சலி கூட்டம், யாங்கூன் நகரில் நடத்தப்பட்டது. கடந்த 2007ல் ஜனநாயகம் கோரி புத்த பிட்சுகள் பலர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய புத்த பிட்சுகள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பலருக்கு 65 ஆண்டு காலம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டல்ல தேச கௌரவம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்காமல் போனால் நான் மகிழ்ச்சி அடைவேன்' என்று முன்னாள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் சொல்லி இருப்பது பலரது கோபத்தைக் கிளறி இருக்கிறது. மணிசங்கர் அய்யர் பொறாமையால் பிதற்றுகிறார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதியும், பொறுப்பற்றத்தனம் என்று பாரதீய ஜனதா கட்சியும் அவரது பேச்சை வர்ணித்திருக்கிறார்கள்.

மணிசங்கர் அய்யர் அப்படிப் பேசியிருக்க வேண்டாம்தான். ஒரு நாட்டின் கெüரவப் பிரச்னையாக மாறிவிட்டிருக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை வேண்டாம் என்று ஒதுக்கிவிடவோ, நடத்தாமல் போவதோ இன்றைய உலகச் சூழலில் இந்தியாவின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் உகந்ததாக இருக்காது.

இந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட 16 ஆயிரம் கோடி ரூபாயை கிராமப்புறங்களில் வாழும் ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கிற மணிசங்கர் அய்யரின் கருத்து, அவரது சமதர்ம சிந்தனையையும், மனிதாபிமான கண்ணோட்டத்தையும் காட்டுகிறதே தவிர, தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தவில்லை.

மணிசங்கர் அய்யர் சொன்னது ஒருபுறம் இருக்கட்டும். நமது இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் கையாலாகாத்தனம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறதே அதற்கு என்ன செய்யப் போகிறோம்? இப்படியே போனால், இந்தியா சர்வதேச அரங்கில் ஏளனத்துக்கும், அவமானத்துக்கும் உள்ளாகப் போகிறதே, இதைப்பற்றி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரோ, பிரதமர் மன்மோகன்சிங்கோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லையே ஏன்?

கடந்த 2003-ம் ஆண்டு, முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் இருக்கும்போது, பல நாடுகளின் போட்டியை எதிர்கொண்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை தில்லியில் நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது. இதற்காக 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செலவாகியும் இருக்கிறது. ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் சரியாக ஒரு மாத இடைவெளிதான் இருக்கிறது போட்டிகள் தொடங்க. இன்னும் கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்கப்படவில்லை. விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி முக்கால்வாசிதான் முடிந்திருக்கிறது. விளையாட்டு வீரர்கள் வந்தால் தங்கும் வசதிகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. சர்வதேசத் தரத்துக்கு தில்லி விமான நிலையம் உயர்த்தப்பட்டிருப்பது மட்டும்தான், முழுமையாகச் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை எந்த ஒரு பணியும் திட்டமிட்டதுபோல நடக்கவில்லை, முடிக்கப்படவும் இல்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கியது. அப்போதாவது மத்திய அரசும் ஆட்சியாளர்களும் சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஒதுக்கப்பட்ட தொகையைவிட பல மடங்கு அதிகமாக ஒப்பந்தக்காரர்கள் செலவழித்து, அதற்காகப் பணமும் பெற்றிருக்கிறார்கள். வேலை முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. ஏறத்தாழ 14 முக்கியமான வேலைகள் முடியவில்லை என்பது மட்டுமல்ல, அதற்குப் பின்னால் நடந்திருக்கும் ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், தில்லி அரசு என மூன்று அரசு இயந்திரங்கள் கைகோத்துச் செயல்படும் இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கான வேலைகளில், சுணக்கம் ஏற்பட்டிருப்பதற்கும், தரம் குறைந்திருப்பதற்கும் அடிப்படைக் காரணம், தில்லியில் கோலோச்சிவரும் கட்டட கான்ட்ராக்டர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்கிற மூவர் அணியின் கூட்டுக்கொள்ளைதான் என்பதை மத்திய ஊழல் கண்காணிப்புக் கமிஷன் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கடந்த 1982-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது, புதுதில்லி சர்வதேச மரியாதையை அடைந்தது. புதுதில்லியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ஆசிய விளையாட்டுப் போட்டி தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது அன்றைய இந்திராகாந்தி அரசு. கடந்த 2008-ல் தனக்கு சர்வதேச அந்தஸ்தை சீனா ஏற்படுத்திக்கொண்டது, பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டியை நடத்தியதன் மூலம்தான். கம்யூனிச நாடான சீனாவைப் பற்றி உலக அரங்கில் இருந்த தவறான கண்ணோட்டத்தை மாற்றி எழுதவும், சர்வதேசத் தரத்தினாலான கட்டமைப்பு வசதிகளை பீஜிங்கிற்கு ஏற்படுத்திக்கொள்ளவும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவுக்கு உதவின.

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியைத் தென்னாப்பிரிக்கா நடத்த முன்வந்தபோது, பல உலக நாடுகள் மிகவும் பின்தங்கிய அந்த நாட்டை சந்தேகத்துடன்தான் பார்த்தன. ஜோகன்னஸ்பர்க்கில் வெற்றிகரமாக ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை கால்பந்துப் போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்கா தற்போது உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

சர்வதேசப் போட்டிகளை நடத்துவது விளையாட்டுக்காக மட்டுமல்ல. அந்த நிகழ்வைக் காரணம் காட்டி, கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும், சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்கவும், அந்த தேசத்தில் குறிப்பிட்ட விளையாட்டுக்கு ஊக்கமளித்து, உலக சாம்பியன்களை உருவாக்கவும், எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் கெüரவத்தை சர்வதேச அரங்கில் நிலைநாட்டவும்தான்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வந்து ஏற்பாடுகளைப் பார்வையிட்ட சர்வதேச காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கூட்டமைப்புத் தலைவர் மைக் பென்னல், ஏற்பாடுகள் மிகவும் ஆமை வேகத்தில் நகர்வதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம் என்றும் அப்போதே ஐயப்பாட்டை எழுப்பினார். மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையும் சந்தேகங்களை ஓராண்டுக்கு முன்பே எழுப்பியது. அப்படியிருந்தும் இன்னும் வேலைகள் முடிந்தபாடில்லை. ஆத்திர அவசரத்தில் அக்டோபர் 3-ம் தேதிக்குள் எதையோ செய்து முடித்து, நாங்களும் காமன்வெல்த் போட்டிகளை நடத்தினோம் என்று சொல்வோமேயானால்,உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறும்!

16 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் விரயமாகி இருக்கிறது என்று மணிசங்கர் அய்யர் கூறியிருப்பதில் ஏதோ உண்மையும் இருக்கத்தானே செய்கிறது. பீஜிங் ஒலிம்பிக் போட்டியோடும், ஜோகன்னஸ்பர்க் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியோடும், தில்லியில் நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டியை உலகம் ஒப்பிட்டுப் பார்க்கும் என்பதை நினைத்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது!

தாமதிக்கலாகாது!

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருப்பதாக வரும் செய்தி சற்று ஆறுதல் தருவதாக இருந்தாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பழையபடி சகஜ நிலைக்குத் திரும்புமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. கலவரம் ஓய்ந்திருப்பது என்பது அடுத்த சில நாள்களுக்கான உணவுப் பொருள்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதற்காகக்கூட இருக்கலாம். நாம் அதற்காக காஷ்மீரத்து மக்களைக் குறை கூறிவிட முடியாது. இந்த நிலைமைக்குக் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்ல என்பதை முன்பே ஒருமுறை தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

தீவிரவாதத்தின்மீது சலிப்பு ஏற்பட்டிருந்த மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன், தேர்தலில் பங்கு பெற்றனர். சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் வன்முறையோ, அசம்பாவிதங்களோ இல்லாமல் நடந்தன. தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்களையும் நடத்தி, அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலியிருந்தால், அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தால் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்காது. உள்ளாட்சித் தேர்தல் நடந்து எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வலுப்பெற்று விடுமோ என்கிற பயத்தில், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாதன் விளைவுதான் மக்களின் அதிருப்திக்கு முக்கியமான காரணம்.

மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியது ஸ்ரீநகரில் மட்டுமல்ல, பட்காம், கந்தர்பால், குப்வாரா, அனந்த்நாக், பாரமுல்லா, குல்காம், பந்திபோரா, சோபியான், புல்வாமா என்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விட்டனர். சாதாரணமாகக் காஷ்மீரத்தில் பெண்கள் வெளியே வருவதில்லை. இப்போது பெருமளவில் குடும்பப் பெண்கள் கையில் கல்லுடன் தெருவில் இறங்கி ராணுவத்துக்கும், காவல்துறையினருக்கும் எதிராகப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் அதிருப்தி எந்த அளவுக்குக் கட்டுக்கடங்காமல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தல்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும், தடைகளையும் மீறி வாக்குச்சாவடிக்கு வைராக்கியத்துடன் விரைந்த அதே காஷ்மீர் மக்கள் இப்போது அரசுக்கு எதிராகக் கோபம் கொந்தளிக்கத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருப்பது ஏன் என்பதை நமது ஆட்சியாளர்கள் யோசிக்க மறுக்கிறார்கள்.

1991-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடக்கு காஷ்மீரில் உள்ள குனான் போஷ்புரா என்கிற கிராமத்தில் நுழைந்த ராணுவ வீரர்கள் நூற்றுக்கும் அதிகமான பெண்களைக் கற்பழித்தனர். அரசு நீதி வழங்கவில்லை. காஷ்மீர் பற்றி எரிந்தது. அந்த ஜுவாலையை அடக்கப் பத்தாண்டுகள் பிடித்தன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சோபியன் என்ற ஊரில் வீட்டில் இருந்த இரண்டு பெண்களை சில ராணுவ வீரர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். அந்த இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் ஓர் ஓடையில் கிடந்தன. அவர்கள் தண்ணீரில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக மரண அறிக்கை தயாரிக்கப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், அந்த ஓடையில் ஓர் அடி ஆழத்துக்குக்கூடத் தண்ணீர் கிடையாது.

விசாரணை என்கிற பெயரில் உண்மை மூடி மறைக்கப்பட்டது. தவறு செய்தவர்களைத் தண்டித்தால் ராணுவத்தினர் மனத்தளர்வு அடைந்து விடுவார்கள் என்று சாக்குப்போக்கு சொல்லப்படுகிறது. என்ன அபத்தமான வாதம்? கலவரத்தை அடக்கத் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதைத் தவறு என்று கூறவில்லை. ஆனால், வீட்டில் தனியாக இருக்கும் இளம் பெண்களைக் கடத்திச் சென்று கற்பழிப்பது ராணுவமாக இருந்தாலும், காவல்துறையாக இருந்தாலும், ஏன் யாராக இருந்தாலும் தவறுதானே? தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே?

அரசு தவறு செய்த ராணுவ அதிகாரிகளைக் காப்பாற்ற முற்பட்டதில் தொடங்கி, ஒன்றன்பின் ஒன்றாகச் செய்துவரும் தவறுகள் ஏராளம், ஏராளம். முதல்வர் ஒமர் அப்துல்லா நல்லவராக, ஊழலற்றவராக இருக்கலாம். ஆனால், நிர்வாகத் திறமையும், அரசியல் அனுபவமும் இல்லாதவர் என்பதைக் கடந்த ஓராண்டு காலமாக அவர் நிர்வாகம் செய்த விதமும், கடந்த ஒருமாத காலமாக அவர் கலவரத்தைக் கையாண்ட விதமும் வெட்டவெளிச்சமாக்குகிறது.

பாகிஸ்தானின் இன்றைய மேல்மட்ட ராணுவத் தளபதிகளான ஜெனரல் கயானி, தாரிக் மஜீத், காலித் ஷமீம் வைன், சையத் அப்சர் ஹுசைன், அகமத் பாஷா, ஜவீத் ஜியா என்று அனைவருமே 1971-ல் பாகிஸ்தானிய ராணுவம் இந்தியாவிடம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தபோது அந்த ராணுவத்தில் சமீபத்தில் சேர்ந்திருந்த இளம் தளபதிகள். சுமார் 90,000 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்ததையும், வங்கதேசம் பிளவுபடுத்தப்பட்டு தனி நாடாக்கப்பட்டதையும், தேசிய அவமானமாகக் கருதி மனத்திற்குள் வெம்பித் தவிப்பவர்கள். அன்றைய தோல்விக்குப் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் இவர்களது வெறிக்கு இன்று காஷ்மீர் கைக்கெட்டும் தூரத்து வாய்ப்பாகத் தெரிகிறது.

நாம் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தலாம். ஆனால், பாகிஸ்தான் ராணுவமும், மக்களின் அதிருப்தியைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, பின்னணியில் இருந்து எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கும் பிரிவினைவாதத் தீவிரவாதக் கும்பலும் அமைதி ஏற்படுவதை அனுமதிக்காது. நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வரும்போது காஷ்மீர் கலவரம் உச்சகட்டத்தை எட்ட வேண்டும் என்பதுதான் இவர்கள் திட்டமாக இருக்கும்.

இனியும் நாம் தாமதிக்க முடியாது. காஷ்மீரில் ஒமர் அப்துல்லா ஆட்சி கலைக்கப்பட வேண்டும். உடனடியாகக் காஷ்மீர் கலவரப் பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். இன்னும் பத்தாண்டுகள் பழையபடி போராட வேண்டும். வேறு வழியேதும் புலப்படவில்லை.

தொலைநோக்குப் பார்வையும், நிர்வாகத் திறமையும், தவறை மூடிமறைக்கப் பார்க்கும் நேர்மையின்மையும்தான் காஷ்மீரின் இன்றைய நிலைமைக்குக் காரணம். வங்கதேசம் பிரிந்ததுபோல, இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிக்கப்பட்டு பழி வாங்கப்பட வேண்டும் என்கிற பாகிஸ்தானிய ராணுவ ஜெனரல்களின் எதிர்பார்ப்பை முதலில் முறியடித்தாக வேண்டும். அதுதான் உடனடி குறிக்கோளாக இருக்க முடியும்!